பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம்

பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம்

தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்ப வினைத்திறன் மிக்க வேலைத்திட்டமொன்றை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்கவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு கோபா குழு பணிப்புரை விடுத்துள்ளது.

 

தொழிற் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்ப வினைத்திறன் மிக்க வேலைத்திட்டமொன்றை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அண்மையில் (21) அறிவுறுத்தியது.

 

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் தர மேம்பாட்டிற்காக ஆற்றவேண்டிய பணிகள் குறித்த செயலாற்றுகைக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை ஆராயும் நோக்கில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அண்மையில் (21) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம் தலைமையில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

 

இதற்கமைய இந்த நிறுவனத்தை எதிர்காலத்தில் மீண்டும் கோபா குழுவின் முன்றிலையில் அழைக்கவிருப்பதாகவும் தலைவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் பயிற்றப்பட்ட பணியாளர்களுக்கான தேவை அதிகம் காணப்படுவதுடன், கேள்விக்கு ஏற்ற வகையில் பயிற்சி பெற்ற பணியாளர்களை இந்நாட்டிலிருந்து அனுப்ப முடியாமல் உள்ளமை பாரிய பிரச்சினை என்றும், 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 33 விகிதத்தை விடவும் குறைவாகக் காணப்பட்டதாகவும் குழுவின் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

 

பொறுப்புக் கூறவேண்டிய நிறுவனங்கள் உரிய ஒருங்கிணைப்புடன் சரியான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமையே இந்த நிலைமைக்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

 

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் என்பன இந்நாட்டிலுள்ள தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து உலகின் புதிய தொழிற்சந்தை குறித்து உரிய கவனம் செலுத்தி அங்குள்ள கேள்விக்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட துறைகளில் பணியாளர்களைப் பயிற்றுவிக்க புதிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

 

தேசிய புலம்பெயர் பணியாளர் குறித்த கொள்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள போதும், அதனை அடிப்படையாகக் கொண்டு செயற்படாமை குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இதற்கு அமைய இந்தக் கொள்கைத் திட்டம் காலத்துக்கு ஏற்ற வகையில் நவீனப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

 

இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறியபோதும் அதில் காலதாமதம் இருப்பதாகவும், வெளிநாட்டுக்குப் பணியாளர்களை அனுப்புவதில் கொள்கைத் திட்டத்துடன் உள்ள விடயங்களுக்கு இணங்க செயற்பட வேண்டியது பற்றியும் குழு சுட்டிக்காட்டியது.

 

2016ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய தகுதியுடைய தாதியர்களை அனுப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டபோது 425 பேர் விண்ணப்பித்திருந்தபோதும் அதில் மூவர் மாத்திரமே உரிய மொழித் திறமையுடன் காணப்பட்டதாகவும் இங்கு புலப்பட்டது.

 

ஜப்பான், கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்களின்படி, பயிற்சி பெற்ற பணியாளர்களை அனுப்ப வாய்ப்பு இருந்தாலும், ஆட்கள் எண்ணிக்கை குறைவதால், இந்த நாட்டிலிருந்து வெளிநாடு செல்லும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றமையும் தெரியவந்தது.

 

சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள தூதரகங்களின் தொடர்புகளின் ஊடாக இந்த வேலைவாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்வது மற்றும் இதற்குத் தகுதி பெறக்கூடிய பணியாளர்களுக்குப் பயிற்சியளிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் குழு தெரிவித்தது.

 

நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தரும் துறையாக  வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைகளை இனங்கண்டு மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழு விரிவாகச் சுட்டிக்காட்டியது. அதற்காக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் உள்ள ஆராய்ச்சித் துறை மிகவும் திறமையாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது.

 

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுரேன் ராகவன், மொஹான் பிரியதர்ஷன.த சில்வா, லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பெர்னான்ந்துபுள்ளே, ஜே.சி. அலவத்துவல, இசுரு தொடங்கொட, பேராசிரியர் சரித ஹேரத், வசந்த யாப்பா பண்டார, ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 

அத்துடன், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஆனந்த விமலவீர, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மகேந்திர குமாரசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image