வெளிநாட்டு பணியாளர்களின் பணத்துக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கும் காலம் நீடிப்பு
வெளிநாட்டில் தொழில்புரிகின்றவர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலத்தை நீடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதற்கமைய, டொலர் ஒன்றுக்கு 10 ரூபா மேலதிக ஊக்குவிப்பு தொகை வழங்கும் காலம் 2022 ஜனவரி 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலில்,
வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால் அனுப்பப்படும் பணத்திற்காக “தொழிலாளர்களின் உள்முகப் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் ஐ.அ.டொலர் ஒன்றிற்கான ரூ.2 இனைக் கொண்ட ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக அவ்வாறு அனுப்பும் பணத்திற்காக மேலும் ரூ.8 வழங்குவதை 2022.01.31 வரை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
2021 திசெம்பர் காலப்பகுதியில் இதுவரையிலும் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ரூ.10 கொண்ட இம்மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள், பணப் பரிமாற்று நிறுவனங்கள் அத்துடன்/ அல்லது வங்கிகள் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புகின்ற போது அவர்களுக்கு ஏற்படுகின்ற பரிமாற்றுச் செலவின் வரையறை செய்யப்பட்ட மட்டமொன்று வரை ஏற்றுக்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டில் தொழில்புரிகின்ற பாரிய எண்ணிக்கையிலானோர் எவ்விதக் கட்டணமுமின்றி தமது பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடியதாகவிருக்கும். தொடங்கும் திகதி உள்ளடங்கலாக இது தொடர்பிலான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இலங்கை மத்திய வங்கியினால் விரைவில் வழங்கப்படும்.