தொழிலாளர்கள் வெளிநாடு செல்வது 2020இல் கடுமையாக வீழ்ச்சி - புள்ளிவிபரம்

தொழிலாளர்கள் வெளிநாடு செல்வது 2020இல் கடுமையாக வீழ்ச்சி - புள்ளிவிபரம்

கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் காரணமாக வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பிற்காக நாட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லுதல் 2019 இன் 203,087 இலிருந்து 2020 இல் 53,713 இற்கு 73.6 சதவீதத்தினால் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Migrant_Workers.png

இக்கடுமையான வீழ்ச்சிக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அவர்களுடன் பதிவுசெய்யப்பட்ட புலம்பெயர் வேலையாட்களின் புறப்படுகை மீது விதிக்கப்பட்ட தற்காலிகத் தடைகள், தொழிலாளர்களைப் பெறுகின்ற நாடுகளில் காணப்படும்.

பயணக் கட்டுப்பாடுகள், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு ஆட்சேர்ப்பது இடைநிறுத்தப்பட்டமை மற்றும் புலம்பெயர் வேலையாட்களுக்கான கேள்வி குறைவடைந்தமை என்பன காரணங்களாக அமைந்தன. வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காகப் புறப்பட்ட ஆண்களினதும் பெண்களினதும் புறப்படுகைகள் 2019 உடன் ஒப்பிடுகையில் 2020இல் முறையே 73.5 சதவீதத்தினாலும் 73.7 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்தன.

வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்கான மொத்தப் புறப்படுகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் இசைந்து செல்லும் விதத்தில், அனைத்து தேர்ச்சி வகைகளின் கீழான அதாவது தொழில்சார்ந்தவர்கள், நடுத்தர மட்டத்திலுள்ளவர்கள், எழுதுவினைஞர் மற்றும் தொடர்பானவர்கள், தேர்ச்சிபெற்றவர்கள், தேர்ச்சியற்றவர்கள் மற்றும் வீட்டுப்பணிப் பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கான புறப்படுகைகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020இல் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

அதேவேளை, மத்திய கிழக்குப் பிராந்தியம் 2020 இலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான முக்கிய சேரிடமாகத் தொடர்ந்தும் விளங்கி, வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான மொத்தப் புறப்படுகையில் 82.0 சதவீதத்திற்கு வகைகூறியது. எனினும், மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான புறப்படுகை 2019 உடன் ஒப்பிடுகையில் 74.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் காரணமாக தொழிலாளர்களைப் பெறுகின்ற நாடுகளிலுள்ள இலங்கை புலம்பெயர் வேலையாட்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கொவிட்-19 நோய்த்தொற்றின் முதலாவது அலை ஐரோப்பிய பிராந்தியத்தில் பரவத் தொடங்கியமையுடன் பெரும் எண்ணிக்கையான இலங்கை புலம்பெயர் வேலையாட்கள் பீதி காரணமாக 2020 இன் தொடக்கத்தில் இத்தாலி, தென் கொரியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை திரும்பியிருந்தனர்.

கொவிட்-19 இலங்கைக்குள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு உள்வரும் வர்த்தகப் பறப்புக்களுக்கான வானூர்தி நிலையங்கள் மூடப்பட்டமையின் காரணமாக, கணிசமான எண்ணிக்கை கொண்ட புலம்பெயர் வேலையாட்கள் தாய்நாட்டிற்குப் புறப்படுவதனை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். சுகாதாரம் சார்ந்த இடர்நேர்வுகள் மற்றும் ஒப்பந்தம் காலாவதியாதல், வேலை இழப்புக்கள் மற்றும் நோய்த்தொற்றின் காரணமாக பொருளாதாரச் சரிவுகளிலிருந்து தோன்றிய சம்பள வெட்டுக்கள் தொடர்பிலான பீதி காரணமாக தாய்நாட்டிற்குத் திரும்புவதற்கான தேவை மேலும் அதிகரித்தது.

கொவிட்-19இன் எதிர்மறையான தாக்கம் காரணமாக உள்நாட்டு தொழிலாளர் சந்தை கொதிநிலையில்காணப்படுவதனால், தொழில் ,ழப்புக்கள் காரணமாக தாய்நாட்டிற்குத் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் அதேபோன்று புறப்படுகை நிறுத்தப்பட்டதன் விளைவாக எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களை தவறவிட்ட ஆட்களுக்காகவும் தொடர்ச்சியாக வாய்ப்புக்களைக் கண்டறிவதனூடாக மீண்டும் தொழிலுக்கமர்த்தப்படுதலுக்குரிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். அதேவேளை, பன்னாட்டுத் தொழிற்சந்தைகளில் ஏற்படக்கூடிய எதிர்கால இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் பொருத்தமான சமூகப் பாதுகாப்பு வழிமுறைகள் நிறுவப்படுதலும் அவசியமாகும் என மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image