IMF இன் 2ஆம் தவணைக் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு

IMF இன் 2ஆம் தவணைக் கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் சாதகமான பேச்சு

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதா பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் அமைச்சர்,

“நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் பங்கேற்புடன் அண்மையில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பிரதிநிகள் குழு நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் மற்றும் நீடிப்பு செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த சர்வதேச நாணய நிதியக் குழுவினர், அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்குழு மட்டத்திலான இணக்கப்பாட்டினை விரைவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளதாகவும், அதற்காக வரி சேகரிப்பு செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் மற்றும் வரி செலுத்தாமல் இருப்போரை கண்டறிவதற்கான வேலைத்திட்டம் என்பன குறித்தும் ஐ.எம்.எப் குழுவினர் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.

மேலும் இந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான தவறான எண்ணங்களை பரப்ப சிலர் முயற்சித்து வருவதாகவும், மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் இன்னும் பல செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைத் தலைமைத்துவம் வகிக்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் இலங்கைக்கு சில நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று போலியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் பலவும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றகரமான பேச்சுவார்த்தையில் தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்து வருகின்றன.

மறுமுனையில், நாட்டின் பணவீக்கம் 1.3 ஆக குறைவடைந்துள்ளமை மற்றும் கையிருப்பு அதிகரித்துள்ளமை, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பணம் அனுப்பும் செயற்பாடுகள் சுமூகமான நிலைக்குத் திரும்பியுள்ளமை, நாட்டின் அடிப்படைக் கணக்கின் வைப்புத் தொகை அதிகரித்துள்ளமை என்பன மகிழ்ச்சிக்குரியது இருப்பினும் அரசாங்கத்தின் வருமானம் 48% ஆக அதிகரித்துள்ள நிலையில், செலவீனம் 38% ஆக அதிகரித்துள்ளது.

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் காலப்பகுதியில் கடன் செலுத்துவதற்கு தவணைகளை செலுத்துவதற்கு மாறாக பெருமளவில் வட்டி பணத்தை செலுத்த நேர்ந்துள்ளமையே அரச செலவீனங்கள் அதிகரிக்க காரணமாகியுள்ளன. எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழான பொருளாதார மறுசீரமைப்புக்களின் பலனாக எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலைமையை அடையும் என்றும் நம்பிக்கை உள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்புக்களை 20 வருடங்களுக்கு முன்பாகச் செய்திருக்கும் பட்சத்தில் நாடு வலுவான நிலைமை அடைந்திருக்கும். அதன்படி அபிவிருத்தி அடைந்த நாடுகள் பின்பற்றிய அனைத்து படிமுறைகளையும் அரசாங்கம் பின்பற்றி வருகின்றது.

இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியில் இந்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால், அதனால் தமது அரசியல் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என கருதுகின்ற சிலர் தவறான கருத்துக்களை பரப்ப முற்படுகின்றனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவனை கடன் இலங்கைக்கு கிடைக்காது என எவரும் குறிப்பிடவில்லை.

மறுமுனையில் பொருளாதாரத்திற்கான இயற்கை வளங்கள் அற்ற நாடுகளின் வரி அறவீட்டு குறிகாட்டியில் இலங்கை மிக குறைந்தளவில் வரி அறவிடும் நாடாக பெயரிடப்பட்டுள்ளதால், வரி அறவீட்டுக்கான (RAMIS) மென்பொருளை புதுப்பித்து வரி சேகரிப்பு பணிகளை சீரான முறையில் முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையில் மீண்டும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படாது என்ற உறுப்பாட்டினையை சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது.

அத்தோடு, அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு முன்பாக நாட்டின் பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடை நீக்கப்படும். அதேநேரம் பொதுப்போக்குவர்துக்கான வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடு அவசியம் என்றும் மற்றைய வாகனங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.” என்றும் பதில் அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image