GMOA வின் முன்மொழிவுகளை சுகாதார அமைச்சுக்கு ஆற்றுப்படுத்த இணக்கம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்த முன்மொழிவுகளை சுகாதார அமைச்சுக்கு ஆற்றுப்படுத்த இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் இணக்கம்
பாராளுமன்றத்தில் அண்மையில் கூடிய (06.08.2024) இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முக்கியமான முன்மொழிவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சன்ன ஜயசுமன தலைமையில் கூடியபோதே இவ்விடயம் பற்றி ஆராயப்பட்டது.
வைத்திய அதிகாரிகளின் பணிச்சூழல் மற்றும் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகள் சிலவற்றை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்திருந்தது. தமக்கு வழங்கப்பட்ட பணிக்கு மேலதிகமாகப் பணியாற்றும் விசேட தர மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலான மருத்துவ அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்குவது, ‘இலங்கை மருத்துவ சேவை’ என்ற தனியான பிரிவொன்றை உருவாக்குதல் மற்றும் அதற்குத் தனியான சம்பளக் குறியீட்டை உருவாக்குதல் உள்ளிட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த முன்மொழிவுகளுக்குத் தனது ஆதரைவைத் தெரிவித்த ஒன்றியம் இவற்றுக்கு கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்தது. குறித்த முன்மொழிவுகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அவற்றைக் கவனத்தில் கொள்வதற்குமாக சுகாதார அமைச்சுக்கு ஆற்றுப்படுத்துவதாகவும் இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தெரிவித்தது.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு சுகாதார அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பத்திரன மற்றும் இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல ஆகியோர் கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்ததுடன், மருத்துவ நிபுணர்களின் நலன்களை முன்னேற்றுவதற்கான கூட்டு முயற்சிக்கான நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தினர்.
இலங்கையில் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கும் மருத்துவ அதிகாரிகளின் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும் ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது பாராட்டுகளைத் தெரிவித்தது.
இந்த கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் வைத்தியகலாநிதி சீதா ஆரம்பேபொல, வைத்தியகலாநிதி ராஜித சேனாரத்ன, வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, வைத்தியகலாநிதி திலக் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.