ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துக - FMM
ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடைபெறுகின்ற தாக்குதல்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை விரைவுப்படுத்துமாறு சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ்மா அதிபரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹனா இப்ராஹீம் மற்றும் செயலாளர் லசந்த் டீ சில்வா ஆகியோரின் கையொப்பத்துடன் ஜனவரி மாதம் நான்காம் திகதி பொலிஸ்மா அதிபருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் ஊடக அறிக்கையிடலில் ஈடுபட்டும் சுதந்திர ஊடகவியலாளர் தமிழ்செல்வம் மற்றும் அம்பாறை மாவட்ட ஊடக அமைப்பின் தலைவர் அச்சல உபேந்திர ஆகியோர் அண்மைய நாட்களில் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பில் அறிய கிடைத்துள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வம் மீது தாக்குதல் நடத்தி அவரை கடத்திச் செல்வதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும், மணல் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற ஒரு தரப்பினர் ஊடகவியலாளர் அச்சல உபேந்திர மீது தாக்குதல் நடத்தி அவரது கமராவுக்கு சேதம் விளைவித்ததாகவும் அறிய முடிவதாக சுதந்திர ஊடக இயக்கம் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இந்த செயல்களுக்கு வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ள சுதந்திர ஊடக இயக்கம், இது கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றின் மீது விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தல் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்குமாறும், இலங்கை பொலிஸ், இந்த சம்பவங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருந்தால் அது தொடர்பில் தங்களுக்கு அறியப்படுத்துமாறும் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.