
சுகாதார ஊழியர்களுக்கான சலுகை மற்றும் மேலதிக சேவை கால கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் வியாழக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்படி தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
புதிய அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதார ஊழியர்களின் 1/20, 1/160 ஆகிய கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.
புதிய வரவு – செலவு திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், கடந்த மாதம் 24 ஆம் திகதி சுகாதார ஊழியர்களுக்கான சலுகைகள், மேலதிக சேவைகால கொடுப்பனவு குறைக்கப்பட்டமைத் தொடர்பில் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உடன் கலந்துறையாடியிருந்தோம்.
இதன்போது சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் நியாயமற்ற முறையில் குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தோம். அன்று இப்பிரச்சினைக்கு பொறிமுறை ரீதியிலான தீர்வை காண்பது அவசியம் எனவும் அதற்கு ஒருவார காலவகாசம் வழங்குமாறும் சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் அதற்கான தீர்வினை கண்டறிந்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதை அறிந்து கொள்வதற்கு சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு ஆர்வமாக உள்ளது. ஆகையால் செவ்வாய்க்கிழமை (4) அல்லது புதன்கிழமை (5) அதற்குரிய எழுத்து மூலமான உத்தியோகபூர்வ அறிவிப்பு அரசாங்கத்தால் வெளியிடப்பட வேண்டும். இல்லையே எதிர்வரும் 6ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.
இதேவேளை நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம், அரச மருத்துவவியல் பரிசோதகர்கள் சங்கம், அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், அரச பற்சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், அரச குடும்ப நல உத்தியோகத்தர் சங்கம், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளடங்களாக சுமார் 18 சங்கங்கள் இணைந்து மேற்படி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட போவதில்லை என அகில இலங்கை தாதியர் சங்கத் தலைவர் மதிவத்த தெரிவித்துள்ளார்,
அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவு திட்டத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துக் கொண்டு ஒரு சில குழுவினர் அரசுக்கு எதிராக செயற்படுகின்றனர். முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்படும் தரப்பினரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
பெரும் சிரமத்துக்கு மத்தியில் தற்போதைய அரசாங்கத்தை இந்நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர். மக்களின் ஆணைக்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை எமக்கில்லை. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களே கடந்துள்ளன. கொடுப்பனவுகளை குறைத்துள்ளதாக சாடுகின்றனர்.
இந்த குறுகிய காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு எங்கிருந்து நிதி கிடைக்கும் என்பது தொடர்பில் எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை.எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அகில இலங்கை தாதியர் சங்கம் ஒருபோதும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன் என்றார்.