2025 இற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
2025ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்றும், அந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் இடைக்கால ஒதுக்கீடு மூலமே செலவுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2025 மார்ச் மாதம் இறுதி வரை இடைக்கால ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாட்காட்டியின் பிரகாரம் இந்த வருடம் தேர்தல் ஆண்டாகும் எனவும், வருட இறுதியில் தேசிய அளவிலான தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த தேர்தலின் ஊடாக அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கு தமது கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இந்த வருட இறுதியில் 2025ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.