தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை கூட்டுமாறு புதிய தொழில் அமைச்சரிடம் வேண்டுகோள்
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை மீண்டும் நிறுவி, புதிய தனித் தொழிலாளர் சட்ட உருவாக்கல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்குமாறு புதிய தொழில் அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் சில தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் கூறியுள்ளனர்.
அந்த கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
2024 செப்டம்பர் 26 ஆம் திகதி
ஹரிணி அமரசூரிய
கௌரவ பிரதமர்
தொழில் அமைச்சர்
பிரதமர் காரியாலயம்
பார்க் வீதி கொழும்பு 7.
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை நிறுவுதல் மற்றும் "தனி தொழிலாளர் சட்டம்" தொடர்பானவை
எல்லாவற்றுக்கும் முதல், நாட்டின் மூன்றாவது பெண் பிரதமர் மற்றும் முதல் பெண் தொழில் அமைச்சர் போன்ற பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக நாங்கள் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். மேலும், தனியார் துறை தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், தொழில் நிலைமையை மேம்படுத்துவதற்கும் நீங்கள் மற்றும் உங்கள் அரசாங்கத்தின் அனைத்து கொள்கை ரீதியான தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை அங்கத்துவ உறுப்பினர் தொழிற்சங்கமாக நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குவதாக நாங்கள் தெரிவிக்கின்றோம்.
எவ்வாறாயினும், காபந்து அரசாங்கத்தின் தொழில் அமைச்சராக உங்களுக்குள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில குறிப்பிட்டத்தக்க விடயங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு இதனூடாக கோருகின்றோம்.
01. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை நிறுவுதல்
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முத்தரப்பு ஆலோசனை சமவாயத்தில் இலங்கை அரசாங்கம் உள்ளீர்க்கப்பட்ட பின், அதன் உள்ளடக்கத்திற்கமைய 1994 தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை நிறுவப்பட்டது. வருடாந்தம் அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதுடன், அதன் நிபந்தனைகளின்படி, தொழிலாளர் அமைச்சரின்/அமைச்சினியின் தலைமையில் மாதாந்தம் கூடவேண்டும்.
எனினும், முன்னாள் தொழில் அமைச்சரினால் அது செயற்படுத்தப்படாமையால், 2023 ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையில், ஓர் ஆண்டும் இரண்டு மாதங்களாக தொழில் ஆலோசனை சபை இயங்கவில்லை.
அதேநேரம், காபந்து அரசாங்கமாக இருந்தாலும், தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை நிறுவ சட்டரீதியான எந்தத் தடையும் இல்லை.
02. தனி தொழிலாளர் சட்டத்தை உருவாக்குதல்
இதற்கு வரலாறு இல்லை. மிகவும் சுருக்கமாக கூறுவதானால், காலணித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருக்கும் சில தொழிலாளர் சட்டங்கள் தற்போதைய உலகிற்கு பொருந்தாது என்ற பொதுக் கருத்துடன், தொழில்துறை சமநிலையைப் பேணுவதற்காக, அந்த அனைத்தும் அவசியமான வகையில், தனித் தொழிலாளர் சட்டம் என்றவாறு உருவாக்குதல் என்ற முனைப்புகளுக்கு அமைய, நல்லாட்சி அரசாங்கத்தில் அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்றின் நிதி மற்றும் வளத்துடன், தனித் தொழிலாளர் சட்டம் சட்டவரைவாக்கப்பட்டது. இந்த நாட்டில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது அல்லது உருவாக்குவது தொழிலாளர் அமைச்சின் உரிமை மற்றும் பணியாளர் பிரதிநிதித்துவம் என்ற அடிப்படைக் கொள்கை நிலைப்பாட்டில், ஒற்றைத் தொழிலாளர் சட்டத்தை நாங்கள் நிராகரித்தோம்.
ஆனால் முன்னைய அரசாங்கத்தின் கீழ் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் தனது நட்பு மற்றும் வணிக பிரதிநிதித்துவத்துடன் பல்வேறு கலந்துரையாடலை நடத்தி சட்டம் இயற்றுவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மீண்டும் எதிர்த்தோம். கொள்கை ரீதியான நிலைப்பாட்டின் படி, அத்தகைய சட்ட உருவாக்கமானது, நிலையான பங்குதாரர்களுடன் வெளிப்படையான விவாதங்களுடன் இருக்க வேண்டும். எங்களது எதிர்ப்புகளையும், சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் கருத்திற்கொள்ளாமல், முன்னாள் தொழில் அமைச்சரால் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை இயக்கப்படாதிருந்தது.
எனவே, தொழிலாளர் சட்டத்தை இயற்றுவதற்காக உங்கள் அமைச்சின் மேற்பார்வையின்கீழ், தொழிலாளர் திணைக்களமும், தனியார் துறையின் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்தருநர் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளைக் கொண்ட, தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் இந்த விவாதத்தைத் தொடங்குமாறும், அவ்வாறு செய்வதை தொழிலாளர் அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
எனவே, தொழிலாளர் அமைச்சின் இணையத்தளத்தில் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை தொகுப்பின் பிரகாரம் https://ta.labourmin.gov.lk/national-labour-advisory-council/ தாமதமின்றி தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை நிறுவுமாறு இதனூடாக நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த இரண்டு விடயங்களையும் உங்களால் தாமதமின்றி நிறைவேற்ற முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
நன்றி
இங்ஙனம்
கையொப்பமிட்ட தொழிற்சங்கங்கள்
சுதந்திர வர்த்த க வலய மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கம், இலங்கை தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்டத் சேவையாளர் சங்கம், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழில் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், தேசிய சேவையாளர் சங்கம், இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம், தேசிய தொழிலாளர் சங்கம், ஒன்றிணைந்த தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்