அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு: அமைச்சரவை பேச்சாளரின் கருத்து

அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வு: அமைச்சரவை பேச்சாளரின் கருத்து

பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்படும் வரவு - செலவு திட்டத்திலேயே அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை அவ்வாறே நடைமுறைப்படுத்த முடியும் என ஸ்திரமாகக் கூற முடியாது என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். வாழ்க்கை செலவு அதிகரிக்கும் போது, அதற்கு சமாந்தரமாக கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட வேண்டும். எதிர்வரும் ஜனவரியிலிருந்து அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதற்கான நிதியை ஒதுக்க வேண்டியுள்ளது. நிதியை ஒதுக்க வேண்டுமெனில் வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னரே வரவு - செலவு திட்டமும் சமர்ப்பிக்கப்படும். எனவே வரவு - செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் போது தான் இது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும்.

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியுமா? , முடியும் என்றால் எந்த மட்டத்தில் அதிகரிப்பது? , அதிகரித்தால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது? என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை கொள்கை ரீதியில் ஏற்றுக் கொள்கின்றோம்.

வரவு - செலவு திட்டத்தின் போது தான் அதற்கான வழிமுறை தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும். அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமின்றி அனைத்து மக்களுக்கும் பல்வேறு எதிர்பார்ப்புக்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். ஆனால் ஒரே சந்தர்ப்பத்தில் அனைத்தையும் நிறைவேற்ற முடியாது என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image