ஆசிரியர் - அதிபர் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

ஆசிரியர் - அதிபர் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

நாட்டில் இருக்கும் பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் இடம்பெறுவதால், இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03)  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹினி குமாரி கவிரத்ன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

ரோஹினி எம்.பி. தெரிவிக்கையில், நாடு பூராகவும் 18ஆயிரம் பதில் அதிபர்கள் கடமையில் இருந்து வருகின்றனர். அவர்களை அதிபர்களாக அவ்வாறே நியமிப்பதா அல்லது அவர்களுக்கு எடுக்க இருக்கும் நடவடிக்கை என்ன? அதேபோன்று அபிவிருத்தி அதிகாரிகளாக பாடசாலைகளில் ஆசிரியர்களாக சேவை செய்துவரும் 16ஆயிரம் ஆசிரியர்கள் தொடர்பில் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என கேட்கிறேன் என்றார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்ந்து பதிலளிக்கையில்,

பதில் அதிபர்களாக கடமை செய்துவரும் 18ஆயிரம் அதிபர்கள் கஷ்டப்பிரதேச பாடசாலைகளிலேயே சேவையாற்றுகின்றனர். அதனால் அவர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்க அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, அது அரச சேவை ஆணைக்குழுவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அரச சேவை ஆணைக்குழுவின் கொள்கைக்கமைய அந்த விடயம் மிகவும் கஷ்டமான நிலைக்கு சென்றது. என்றாலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

அதனால் வழக்கு விசாரணையை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் நாங்கள் அரச சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை எதிர்பார்த்து இருக்கிறோம்.

அத்துடன் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. என்றாலும் தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கை ஆரம்பத்தில் இடம்பெற்று வந்தது. என்றாலும் தற்போது அரச சேவை ஆணைக்குழுவின் புதிய சட்டத்தின் பிரகாரம் தேசிய பாடசாலை,  மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடமாற்றம் செய்ய முடியாது. 

அதனால் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மாகாண ஆளுநர்களின் ஒப்புதலை எடுத்துக்கொண்டு, தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்

மேலும், பாடசாலைகளில் தற்போது அபிவிருத்தி அதிகாரிகளாக இருக்கும் 16ஆயிரம் ஆசிரியர்களை அந்த பாடசாலைகளில் தொடர்ந்து ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள இருக்கும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வழியாென்றை ஒரு வாரத்துக்குள் பரிந்துரைக்குமாறு அரச சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்திருக்கிறோம் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image