மக்களுக்கு சிரமமின்றி கடவுச்சீட்டுகளை உடன் வழங்க அறிவுறுத்தல்

மக்களுக்கு சிரமமின்றி கடவுச்சீட்டுகளை உடன் வழங்க அறிவுறுத்தல்

கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையில் கடவுச்சீட்டுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி அறிவுறுத்தல் வழங்கினார்.

புதிய 'குடிவரவு' சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.
 
இங்கு கருத்துத் தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் ஏறத்தாழ பத்து லட்சம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டபோதிலும் அவர்களில் 23% பேர் மட்டுமே வெளிநாடு சென்றதாகவும், எஞ்சிய 77% பேர் கடவுச்சீட்டைப் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்தார்.
 
அத்துடன், இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் (E-Passport) ஒக்டோபர் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால், சில நாடுகள் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கோருவதற்கு வாய்ப்புள்ளது என்றும், அதனால் அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் முடிந்தவரை மக்களை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழுவின் தலைவர் தெரிவித்தார். எனினும், பணம் செலுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது மக்களின் உரிமை என்பதனால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில், கோரப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவது குடிவரவுத் மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும் குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.
 
அவ்வாறில்லை எனில் திணைக்களமும் அரசாங்கமும் மக்கள் மத்தியில் கடும் வெறுப்புக்கு ஆளாவதை தடுக்க முடியாது என குழுவின் தலைவர் கௌரவ ஜகத் குமார சுமித்ராராச்சி சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தியா மற்றும் நேபாளம் செல்லும் யாத்ரீகர்களுக்கு கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள தடைகள் உடனடியாக நீக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image