மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம் - வேலு குமார்
மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்படவுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின் முதலாவது கூட்டம், குழு அறை 8இல் நடைபெற்றது. அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
இக்கலந்துரையாடலுக்கு கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசிய பாடசாலைகளின் பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.
இம்மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் தேசிய பாடசாலைகளில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வள குறைபாடுகள் பற்றி பேசப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை கல்வி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர்.
இந்த கலந்துரையாடலின்போது பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் உயர்தர வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்த நிலைமை மிக மோசமாக உள்ளது; அதனை நிவர்த்தி செய்ய அவசியமான துறை சார்ந்த ஆசிரியர்கள் இல்லை என்பது தெரியவந்தது.
இந்த சந்தர்ப்பத்தில் பிரச்சினைகளிலிருந்து இருந்து மீள்வதற்கு புதியதொரு திட்டத்தை வகுக்கவேண்டிய தேவையுள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய இந்திய அரசாங்கத்துக்கு ஆசிரியர் தேவை பற்றிய திட்டமொன்று தயார் செய்து முன்வைப்பதோடு அதன் ஒத்துழைப்பை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மலையக மக்கள் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தது முழுமையான வசதிகளை கொண்ட ஒரு தேசிய பாடசாலையாவது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியது மட்டுமன்றி, மலையக மக்கள் அதிகம் வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலையொன்று இல்லாமை பாரபட்சமானது என்பதையும் அவ்வேளை எடுத்துக்காட்டினார்.
மூலம் - வீரகேசரி