பாலியல் குறித்த கல்வியை வழங்குவதற்கான கல்வி வெளியீடுகளுக்கான திகதி அறிவிப்பு
முன்பிள்ளை பருவ அபிவிருத்தி காலத்திலிருந்து வயதுவந்தோர் வரையில் பாலியல் தொடர்பில் கல்வியை வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட புதிய கல்வி வெளியீடுகள் எதிர்வரும் மார்ச் 07ஆம் திகதி வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் (20) கூடிய பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்ட இலங்கையில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை மையமாகக் கொண்டு தனிநபர்களின் பாலியல் கல்வி தொடர்பில் கொண்டுள்ள குறைந்த அறிவை விருத்தி செய்யும் நோக்கில் இந்த பாலியல் கல்வி வெளியீடுகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தனர்.
முன்பள்ளி மாணவர்கள் முதல் 13ஆம் தரம் வரையிலான பாடசாலை மாணவர்கள் வரையிலும், வயது வந்தவர்களுக்காகவும் இந்த வெளியீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பாலியல் கல்வி வெளியீடுகள் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் முழுமையான மேற்பார்வை மற்றும் அவற்றின் அனுமதியுடன் துறைசார்ந்த நிபுணர்களால் தொகுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
முதல் கட்டத்தின் கீழ் பாலியல் கல்வி தொடர்பான வெளியீடுகள் இலத்திரனியல் வெளியீடுகளாக வழங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் பாலியல் பற்றிய அறிவை முறையாக வழங்குவதன் மூலம், சமூகத்தில் உருவாகி வரும் பல நெருக்கடிகளை களைய முடியும் என்றும், இதன் மூலம் பாடசாலை மாணவ மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் ஒன்றியத்தின் முன்னிலையில் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்களான (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, இரான் விக்கிரமரத்ன, சுஜித் சஞ்சய் பெரேரா, இம்ரான் மஹ்ரூப் ஆகியோரும் கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.