வேலைநிறுத்தங்கள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரின் கருத்து

வேலைநிறுத்தங்கள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரின் கருத்து

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவை அரசாங்கம் வழங்கியுள்ளது.

எனவே சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது என பகிரங்க மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.

அத்துடன், மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்களை மேற்கொள்வது நியாயமற்ற செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மக்கள் பிரதிநிதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாதெனவும், அரச அதிகாரிகள் செயல்திறனுடன் மக்களுக்கு சேவை வழங்க கடமைப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் அண்மையில் (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே​யே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அரச நிறுவனங்களுக்குள் பெருமளவான அதிகாரிகள் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குகின்றனர். ஆனால் சில அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவது தெரியவந்துள்ளது. மக்களுக்கான சேவைகள் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை என்பதையும் காண முடிகிறது. சில நேரங்களில் அரச சேவைகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்படாமல் இருப்பதற்கும் அரசாங்க அதிகாரிகள் சிலரது செயல்திறனற்ற செயற்பாடுகளே காரணமாக உள்ளன.

அரசியல் அதிகாரத்துக்குள் காணப்படும் பிழைகளை அவர்கள் சுட்டிக்காட்டினாலும், உயர் மட்ட அதிகாரிகள் சிலர் பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றனர். அரசியல்வாதிகளை தூற்றுவதால் மாத்திரம் நாட்டை கொண்டுச் செல்ல முடியாது. அரச அதிகாரிகள் தமது தனிப்பட்ட நோக்கங்களுக்காகச் செயற்படவும் முடியாது.

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு அழைக்கப்படும் போதும் சில அதிகாரிகள் தமக்கு எவ்வித பொறுப்புக்களும் இல்லையென கூறி அழைப்பைப் புறக்கணிக்கின்றனர். சுயாதீன ஆணைக்குழுக்களும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டுமென அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையிலும் மக்கள் உரிமைகள் பெருமளவில் மீறப்படுகிறது.

சிறந்த செயலாற்றுவதற்கு வௌிப்படையானதும், நேர்மையானதுமான அரச சேவையொன்று அவசியமாகும்.

நெருக்கடியிலிருக்கும் காலத்திலும் அரச ஊழியர்களுக்கு 10000 சம்பள அதிகரிப்பை அரசாங்கம் பெற்றுக்கொடுத்தது. அவ்வாறிருந்தும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் வேலை நிறுத்தங்களை செய்வதை அனுமதிக்க முடியாது. தொழிற்சங்க தலைவர் என்ற வகையில் இவ்வாறான வேலைநிறுத்தங்கள் கண்டிக்கத்தக்கவை.” என்று ஜகத் குமார சுமித்ராராச்சி.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image