நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரம்

நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரம்

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

 
ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று முன்தினம் (01) சான்றுரைப்படுத்தினார்.
 
இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.
 
போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட புதிய பல சட்டங்களை உள்ளடக்கி நிகழ்நிலை காப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த சட்டத்தின் கீழ், பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கான அதிகாரம் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
 
 
கருத்து ஒன்று பொய்யான தகவலாவதில் பல்வேறு காரணிகள் காரணமாகின்றன 
  • ஏதேனும் ஒரு கருத்து தவறானது அல்லது பொய்யானது என கருத்து வெளியிடுபவர் அறிந்திருத்தல் அல்லது நம்புதல்...
  • ஏமாற்றும் அல்லது தவறாக வழிநடத்தும் நோக்குடன் கருத்து வௌியிடுதல்
  • சந்தேகத்தின் அடிப்படையில் எதிர்வுகூறல் மற்றும் தனிப்பட்ட கருத்துகள் புதிய சட்டத்திற்கு அமைவாக பொய்யான தகவலாக கருதப்படமாட்டாது
  • புதிய சட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு பொய்யான அறிக்கைகளை தடைசெய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், இணையத்தில் பொய்யான கருத்துகளை வெளியிடும் நபர்களுக்கு எதிராக  நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக சிறைத்தண்டனை மற்றும் அபராதங்களை விதிக்க நடவடிக்கை எடுக்க முடியும்

 
பொய்யான தகவலை பரிமாறுவதன் ஊடாக,

  • தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் சுகாதாரம் அல்லது பொதுமக்களின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும் சந்தர்ப்பம்
  • வெவ்வேறு மட்டங்களை சேர்ந்த நபர்களிடையே விரோதம் மற்றும் வெறுப்பு உணர்வுகளை ஊக்குவிக்கும் சந்தர்ப்பங்கள் என்பன தடை செய்யப்பட்ட கருத்துகளாகக் கொள்ளப்படும் என்பதுடன், 
  • நாட்டிற்குள் அல்லது நாட்டுக்கு வௌியில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளை விட அதிகரிக்காத சிறைத்தண்டனை அல்லது ஐந்து இலட்சம் ரூபாவை விட அதிகரிக்காத அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் இணைத்து விதிக்கப்படலாம்
  • பொய்யான கருத்துகளினால் கலவரத்தைத் தூண்டுதல், மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவித்தல், மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் அல்லது தீங்கிழைக்கும் நோக்கத்துடன் கருத்துகளை வௌியிடுதல் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இந்த இரண்டும் தண்டனைகளுக்கும் உரிய குற்றங்களாகக் கருதப்படும்
  • நீதிமன்றத்தை அவதூறு செய்யும் வகையிலான கருத்துகளை வௌியிடுதல், இணையத்தில் மோசடிகளில் ஈடுபடுதல் மற்றும் மற்றுமொருவரைப் போல நடித்து ஒன்லைன் மோசடியில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றங்கள் என புதிய சட்டம் கூறுகிறது
  • கலகம் ஏற்படுத்த தூண்டும் நோக்குடன் அல்லது பொதுமக்களிடையே அச்சம், பீதியை தோற்றுவிக்கும் நோக்கத்துடன் கருத்துகளை வௌியிட்டு, அரசாங்கத்திற்கு எதிராகவோ, பொதுமக்கள் அமைதிக்கு எதிராகவோ குற்றம் செய்யத் தூண்டும் வகையில் கருத்துகளை வௌியிடும் நபருக்கு சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டணைகளும் விதிக்கப்படும்
  • துன்புறுத்தல் தொடர்பான தகவல்களை பரிமாறுதல்,  சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தவறொன்றை மேற்கொள்வதற்காக நாட்குறிப்பு தயாரித்தல் அல்லது மாற்றியமைத்தல் என்பன குற்றவியல் செயற்பாடாக புதிய சட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொய்யான கருத்துக்களைத் தடுக்கவும், விசாரணை செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் யாருக்கு அதிகாரம் உள்ளது?

ஒன்லைன் பாதுகாப்பு தொடர்பான புதிய நிகழ்நிலைக்காப்பு சட்டத்தின்படி, இந்த அதிகாரம் நிகழ்நிலை காப்பு  ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவில் 5 உறுப்பினர்கள் உள்ளனர்.

அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்கு அமைவாக இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும்.

அந்த ஐந்து உறுப்பினர்களில் இருந்து ஆணைக்குழுவின் தலைவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.

தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.

தடை செய்யப்பட்ட கருத்துகளாக ஆணைக்குழுவால் நிர்ணயிக்கப்பட்டவற்றை நீக்குமாறு, இணைய சேவை வழங்குநர்களுக்கும், இணைய இடையீட்டாளர்களுக்கும் பரிந்துரை செய்யும் அதிகாரம்  வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை இணையத்தள பயனர்களுக்கு சமூக ஊடக தளங்களை வழங்கும் இணையத்தளங்கள் இந்த சட்டத்தின் கீழ் காணப்படும் விதிகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image