அதிபர் - ஆசிரியர் போராட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம்
ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.
சம்பளப் பிரச்சினை அடங்கலாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி கல்வி அமைச்சு நோக்கி நேற்று (24) பேரணியொன்றை முன்னெடுக்க முயன்ற ஆசிரியர் குழாத்தினரை பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் செய்து கலைத்தனர்.
அதிபர் , ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் தொழிற்சங்க ஒன்றியம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பேரணி பெலவத்தை புத்ததாச மைதானத்திற்கு முன்பாக நேற்று (24) மதியம் ஆரம்பமானது.
பேரணியை முன்னெடுக்க சந்தர்ப்பமளிக்காத பொலிஸார், அதிபர் , ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்கள் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். எனினும், அதனை பொருட்படுத்தாத ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வி அமைச்சை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இதன்போது, தொழிற்சங்கங்களை சேர்ந்த 10 பேருக்கு கல்வி அமைச்சின் செயலாளரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 13 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.