உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வேட்புமனுக்களை இரத்துச் செய்ய இணக்கம்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு ஒப்படைக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஏகோபித்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படாததால், அதற்கு வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இந்த நெருக்கடி நிலைக்குத் தீர்வாக, வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஏகமனதாக இணக்கம் வழங்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இந்த இணக்கம் வழங்கப்பட்டது.
கள உத்தியோகத்தர்கள் தமது தேர்தல் அதிகாரப் பகுதியில் தேர்தலுக்கு போட்டியிடுவதற்குக் காணப்படும் தடைகள் மற்றும் அந்தத் தடைகளை நீக்குவதற்கு சம்பந்தப்பட்ட சட்டத்தைத் திருத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, திருத்தப்பட்ட சட்டமொன்று, திருத்துவதற்கு முன்னர் இருந்தது போன்று மீண்டும் மாற்றுவதற்குத் தேவையாயின், அதற்கு பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையின் அனுமதி மற்றும் சர்வசன வாக்கெடுப்பும் தேவை என வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்ற மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.