மலையக தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் அவசர கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்

மலையக தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் அவசர கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்

மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் குடியேற்றத்தை ஏற்படுத்த பலமான திட்டத்தை வகுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் அடையாளம் மட்டுமல்ல மலையக சமூகமே பேரழிவையே சந்திக்கும் என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலையக மக்கள் இலங்கை மண்ணில் 200 வருட வரலாற்று வாழ்வின் நிறைவை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஊடாக அடையாளப்படுத்தி கொண்டிருக்கையில் பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தோட்ட உரிமையாளர்கள் வரலாற்று நிகழ்வுக்கு சவால் விடுவது போன்று அடாவடித்தனத்தில் ஈடுபடுவதையும், இனவாத முகத்துடன் குண்டர்களை ஏவி விட்டு மலையக  தொழிலாள வர்க்கத்தை வன்முறைக்கு இழுப்பதையும் அரசு தொடர்ந்தும் அனுமதிக்க கூடாது.

இவ் வரலாற்று ஆண்டில் (1823-2023) மலைய மக்கள் இந்நாட்டின் பிரஜைகள், சம உரிமை உடையவர்கள், அவர்கள் இந்நாட்டில் வாழும் இன்னும் ஒரு தேசிய இனம் , நில உரிமை வேண்டும், பெருந்தோட்ட தொழிலாளர் வர்க்கத்தை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் கோரிக்கைகளை பல்வேறு மட்டத்தில் எழுப்பிக் கொண்டிருக்கையில் ரம்போடை, மாத்தளை, தெனியாய, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் வீட்டை விட்டு போ என்பதும்  தொழிலாளர்கள் தாம் கட்டிய வீடுகள் உடைத்து அவர்களை மண்ணில் அந்நியர்களாகவும் கூலிகளாகவும் அடிமைகளாகவும் தோட்ட நிர்வாகங்கள் நடத்துவதை அரசும், தொழிற்சங்கமும், மலையக கட்சிகளும் தலையிட்டு முழுமையாக நிறுத்த வேண்டும்.

இதேபோன்று வெளிச்சத்திற்கு வராத பல சம்பவங்கள் வேறுமிடங்களில் நடந்து கொண்டிருக்கலாம். இதனை இனவாதத்தின் இன்னுமொரு முகம் என்று கூற வேண்டும்.

நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் மலையகத் தமிழர்களின் இருப்புக்கும், கோரிக்கைகளுக்கும் எதிரான நீண்டகால இனவாத செயற்பாடுகளின் தொடர்ச்சி மட்டுமல்ல தொடர்ந்து நிலத்திற்கும் வீடுகளுக்கும் உரிமையற்ற அநாதைகள் என்றே கூறுவதாக தோன்றுகின்றது.

ஆதலால் மலையக தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் கூட்டாக இணைந்து அவசரமாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு சட்டத்தை மதிக்காது தொழிலாளர் குடும்பங்களை அவமதிக்கும் வகையில் நடந்து  கொண்டவர்களை  உடனடியாக நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்து இவ்வாறான துர்பாக்கிய நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்.  அனைத்து தொழிலாளர் குடும்பங்களுக்கும் தங்களது வீடுகளில்,தாங்கள் அமைத்துக் கொண்டு பாதுகாப்பாக, அமைதியாக இருப்பதற்கான சூழ்நிலையை அரசின் பங்களிப்போடு ஏற்படுத்திக் கொடுப்பதோடு இது தொடர்பாக கொள்கை அறிக்கையினை அரசு வெளியிட அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அடுத்ததாக தற்போதைய ஜனாதிபதி 2002இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது பிரதமராக பதவி வகிக்கையில் "தேசிய பௌதீக திட்டம் 2030" அறிமுகப்படுத்தினார். அதற்கு அமைய பெருந்தோட்டங்களை மறைமுகமாக காடுகளாக்குவதற்கும்  நகராக்க திட்டத்தின் கீழ்  மலையக மக்களையும் வாழ வைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன. 

அத்தகைய திட்டங்கள் தற்போதும் நடைமுறைப்படுத்தப்படுவதோடு பெருந்தோட்டங்கள் காடுகள் ஆக்கப்படுகின்றன. இத் திட்டத்திலிருந்து மலையக மக்களை பாதுகாக்கவும் மலையக தேசியத்தை உறுதிப்படுத்தவும் அவசர கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல தற்போது பெருந்தோட்ட நிர்வாகம் உற்பத்தியிலிருந்து  ஒரு இலட்சத்திற்கும்   அதிகமான  ஹெக்டயர் காணிகளை விளக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலங்கள் நாட்டில் காணியற்ற மக்களுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற காணி  பகிர்ந்தளித்ததைப்  போன்று மலையக பெருந்தோட்ட மக்களுக்கும்  மலையக பூர்வீக காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

அத்தோடு, தெற்கு மாவட்டங்களில் பாதுகாப்பற்று தமது அடையாளத்தை இழந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மலையக மக்களை, மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில்  வாழ்வதற்கு  ஏற்ற வகையில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப குடியேற்றத்தை ஏற்படுத்த பலமான திட்டத்தை வகுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் அடையாளம் மட்டுமல்ல மலையக சமூகமே பேரழிவையே சந்திக்கும். அதை தடுக்க எவராலும் முடியாது போய்விடும்.

தற்போது மலையக பெருந்தோட்ட சமூகத்திற்கு 10 பேர்ச்சஸ் காணி கொடுக்கப்படும் எனும் கதை உலாவுகின்றது. இது வாழ்வதற்கான காரணியாகவே அமைய வேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்கான வாழ்வை மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலமே நிலத்துடன் வாழ்வை, நாட்டின் பிரஜைகளுக்கான கௌரவத்தை பெற்றுக் கொடுக்க முடியும். தற்போதைய 10 பேர்ச்சஸ் காணி அறிவித்தல் தேர்தல் கால அல்லது அரசியல் வாக்குறுதியாக அமைந்து மக்களை  சிக்க வைக்கும் வாக்குறுதியாக அமைந்துவிடக் கூடாது. அதற்காக காணி அளவீடும், மக்களிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்பட்டு காணி கச்சேரி ஊடாக காணி பகிர்தளிக்கப்படல் வேண்டும். அதுவே நம்பிக்கையானதாக அமையும்.

எனவே, மலையக கட்சிகள் அடுத்த தேர்தலில் எந்த பேரினவாத காட்சிகளோடு கூட்டணி அமைக்கலாம், எத்தகைய அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ளலாம், எவ்வாறு சலுகைகளை தமதாக்கலாம் என சிந்திப்பதை தவிர்த்து மலையக மக்களின் இருப்பு மற்றும் அடையாளங்களை தக்க வைத்து அவர்களின் அரசியல் எதிர்காலம் கருதி மக்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மூலம் - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image