ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்
மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்றுள்ள பட்டதாரிகளை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அத்துடன் விஞ்ஞானம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, ரோஹினி குமாரி கவிரத்ன எம் பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எந்த முறைமையையும் பின்பற்றாமல் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிக்கும் போது அவர்கள் 52 ஆயிரம் பேரில் 22 ஆயிரம் பேர் பாடசாலைகளுக்கு இணைக்கப்பட்டனர். எந்த முறைமையோ அல்லது பொருத்தப்பாடோ இல்லாமலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எமது ஆரம்ப பாட கல்வித்துறை பாதிக்கப்பட்டுள்ளமை கொவிட் காரணமாக மட்டுமல்ல. பயிற்சி வழங்கப்படாத ஆசிரியர்களை அங்கு நியமித்தமையும் அதற்கான காரணமாகும்.
மேற்படி 22,000 பேரும் தற்போது பாடசாலைகளில் செயற்பட்டு வருகின்றனர். அவர்களை முறைப்படி பயிற்சிகளை வழங்கி பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்தாலும் ஒரு தரப்பினர் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றம் அதற்கான இடைக்கால தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
அதேபோன்று அதிபர்கள் நியமனம் தொடர்பில் தொடுக்கப் பட்டிருந்த வழக்கில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை விலக்கிக் கொள்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்த நிலையில் மீண்டும் அது தொடர்பில் சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றம் மீண்டும் தடை உத்தரவு பிரப்பித்துள்ளது.
மாதக்கணக்கில் வருடக் கணக்கில் தொடரும் இது போன்ற தடையுத்தரவை விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். தடை உத்தரவுகளுக்கு கால எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும் என நான் நீதி அமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றேன். இதனால் மாணவர்களே பெரும் பாதிப்புகளை எதிர் கொள்ள நேர்கிறது.
சில வேளைகளில் தடையுத்தரவு விதிக்கப்பட்டு அடுத்த விசாரணைக்கான தினம் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது தொடர்பில் நீதியமைச்சர் உரிய சட்டத்தில் திருத்தமொன்றை கொண்டு வந்தால் நாம் பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றிக் கொடுக்கத் தயார்.
இவ்வாறு ஆறு மாதங்களுக்கு தடையு த்தரவு பிறப்பிக்கப்பட்டதால் எம்மால் வெற்றிடங்களுக்கு தேவையான அதிபர்களை நியமிக்க முடியாமல் உள்ளது.
பயிற்சி வழங்கப்படாத 22,000 பேர் இப்போதும் பாடசாலைகளில் பணியாற்றுகின்றனர் எனினும் அதனால் மாணவர்களுக்கு எந்த வித பயனும் இல்லை. அநீதியை நிவர்த்தி செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் சொல்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்றார்.
மூலம் - வீரகேசரி