மலையக மக்களின் உரிமைகள் மீறப்படுவது பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேச்சர்ஸ் காணி வழங்கப்பட வேண்டும் அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
மாத்தளை ரத்வத்தை தோட்ட நிர்வாகத்தினரின் செயற்பாடு முறையற்றது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அரசாங்கத்தின் சார்பில் கவலை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவம் தொடர்பில் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர் ரமேஷ் பத்திரன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற அமர்வில் கருத்து வௌியிட்டபோது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மாத்தளை, ரத்வத்தை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அந்த குடும்பத்தினரிடமும் மலையக அரசியல் பிரதிநிதிகளிடமும் அரசாங்கத்தின் சார்பில் கவலை தெரிவித்துக் கொள்கிறோம். உண்மையில் நடக்க கூடாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுமதியற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்ட அந்த தற்காலிக குடியிருப்பை அகற்றுவதில் அந்த தோட்டத்தின் உதவி முகாமையாளர் நேரடியாக தொடர்புப்பட்டுள்ளார். உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் அந்த பிரதி முகாமையாளர் அவ்வாறு செயற்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து தோட்ட முகாமையாளருடன் தொலைபேசியில் உரையாடி உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு பணிப்புரை விடுத்தேன். இதற்கமைய அந்த உதவி முகாமையாளருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு அவருக்கு எதிராக விசாரணைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலத்துக்குள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உரிய இடத்துக்குச் சென்றார். அதே போல் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வடிவேல் சுரேஷ், இராதாகிருஷ்ணன் ஆகியோர் என்னுடன் தொலைபேசியில் உரையாற்றினார்கள். உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தினார்கள்.
மலையக மக்களின் உரிமை மீறப்படுவது பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேச்சர்ஸ் காணி வழங்கப்பட வேண்டும் அதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளோம். தோட்ட நிர்வாகத்தினரின் செயற்பாடு முறையற்றது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கையை பெருந்தோட்டத்துறை அமைச்சர் என்ற ரீதியில் எடுப்பேன் என்றார்.
முலம் - வீரகேசரி