ஆட்கடத்தலை தடுக்க ஒருமித்த நடவடிக்கை முக்கியமானது - பாதுகாப்புச் செயலாளர்
ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதுடன், இது ஒரு சர்வதேச வியாபாரமாக மாறிவருகிறதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த இருண்ட யதார்த்தம் ஒரு சிக்கலான சவாலை ஏற்படுத்துவதுடன், இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் ஒரு அச்சுறுத்தலாக அமைகிறதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆட்கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நோக்கில் ஏற்படு செய்யப்பட்ட செயலமர்வின் ஆரம்ப நிகழ்வு கொழும்பிலுள்ள ராடிசன் ஹோட்டலில் ஆகஸ்ட் 14 இல் இடம்பெற்றது.
இங்கு பிரதான உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
"ஆட்கடத்தலுக்கு எதிராக சிவில் சமூக அமைப்புகளை மேம்படுத்துதல்" எனும் திட்டத்தின் கீழ், யுஎஸ்எய்ட்டின் (USAID) நிதியுதவியுடன் சேப் (Safe) அமைப்புடன் இணைந்து, தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி (NAHTTF) இந்த மூன்று நாள் செயலமர்வினை ஏற்பாடு செய்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் பணிப்புரைக்கு அமைய தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் 36 பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆட்கடத்தல் தொடர்பான அச்சுறுத்தலின் தீவிரத்தை உணர்ந்து, ஆட்கடத்தலைக் கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்காக 2021-2025 ஆம் ஆண்டுக்கான தேசிய மூலோபாய செயல் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம் அத்துடன், எங்கள் அணுகுமுறையானது தடுப்பு, பாதுகாப்பு, வழக்கு விசாரணை மற்றும் கூட்டாண்மை என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது என மேலும் குறிப்பிட்டார்.
கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பாதுகாப்புச் செயலாளர், ஆட்கடத்தல்களை முழுமையாக தடுப்பதற்கு அரசு மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.
தற்போது, இந்த குற்றத்திற்கு எதிரான எங்கள் முயற்ச்சியில் ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவுடன் 20 பங்குதாரர்கள் சேர்ந்து செயற்படுகிறார்கள் என மேலும் சுட்டிக்காட்டினார்.
பிரதேச செயலாளர்களின் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாதுகாப்பு செயலாளர், இந்த பல்துறை ஒத்துழைப்பு தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணியின் முயற்சிகளுக்கு தீவிரமாக பங்களிக்க உதவும் என்று தெரிவித்தார்.
இந்த கூட்டு முயற்சியின் ஆக்கபூர்வமான முடிவுகளை வெளிப்படுத்திய பாதுகாப்பு செயலாளர், "அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நபர்களின் கடத்தல் தொடர்பான ஆண்டறிக்கையில், அடுக்கு 2 கண்காணிப்பு பட்டியலில் இருந்து அடுக்கு 2க்கு நாம் மேம்படுத்தப்பட்டதன் மூலம் எங்கள் முன்னேற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுடன் இணைந்து, கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணிக்குழுவுடன் இணைப்பதற்கும், ஆட்கடத்தல் குறித்த விழிப்புணர்வை கல்வி துறையில் சேர்ப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறினார்.
ஆட்கடத்தல் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று குறிப்பிட்ட அவர், இலங்கையின் தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி என்ற வகையில் ஆட்கடத்தலுக்கு எதிராக முழு பலத்துடன் போராடுவதில் உறுதியாக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இந்த செயலமர்வில், சேப் (Safe) அமைப்பு, சட்டமா அதிபர் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு, தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுயியல் நிறுவனம், சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, தொழில் திணைக்களம், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு,சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சட்ட அதிகாரிகள் வளவாளர்களாக கலந்து கொள்கின்றனர்.