கடவுச்சீட்டு பெறுவதற்கான புதிய முறைமை

கடவுச்சீட்டு பெறுவதற்கான புதிய முறைமை

மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தவாறே தமக்கான கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தமக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தர வேண்டிய அவசியம் கிடையாதென்றும் அதனை இலகு படுத்தும் வகையிலேயே புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கான கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பதாரி தமது விண்ணப்பத்தை இணையதளம் மூலம் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான கட்டணத்தை ஒன்லைன் மூலமாகவோ அல்லது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடவும் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரதேச செயலகங்களில் தமது கைவிரல் அடையாளங்களை

பதிவு செய்ய முடியும். அந்த வகையில் நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 50 பிரதேச செயலகங்களில் விரல் அடையாளங்களை பெற்றுக் கொள்ளும் இயந்திரங்களை பொருத்துவதுடன் அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு மூன்று நாட்களுக்குள் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே அவர்களுக்கான கடவுச் சீட்டை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெற்று வரும் வெளி நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேவைகளைப் பெற்றுக் கொள்ளவரும் பொது மக்களிடம் விரைவாக அந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறியே பணம் அறவிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு செயற்படுபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிவேளை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறான நபர்கள் சில வேளைகளில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் பெற்று வருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள சுற்றாடலில் கடந்த சில தினங்களாக பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்காக நியமித்த திகதிகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளது. அதனால் நேற்று முன் தினம் ஒரு நாள் சேவையும் இரத்துச் செய்யப்பட்டது.

இந்த நிலையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று முதல் மீண்டும் திணைக்களத்துக்கு வருகை தருவோர் அனைவரையும் விரைவாக உள்வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image