தலவாக்கலை - லோகி தோட்ட சந்தியில், மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையால், ஆசிரியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புயை ஆறு சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை - லோகி தோட்டத்திற்கு அருகில் கடந்த 21ஆம் திகதி மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில், அது முறிந்து மின்கம்பம் மீது வீழ்ந்ததில், அந்த மின்கம்பம் உடைந்து மோட்டார் சைக்களில் அமர்ந்திருந்த இருவர் மீது வீழ்ந்தது.
இந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த ஆசிரியரின் மரணத்திற்கு நீதிக் கோரி தலவாக்கலை லோகி தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, தலா 02 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணை மற்றும் 15,000 ரூபா ரொக்கப் பிணையில் செல்வதற்கு சந்தேகநபர்களுக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பமிட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சாட்சியாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களையும் விடுக்கக்கூடாது என சந்தேகநபர்களுக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, நுவரெலியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.