மின்சார கட்டணத்தை செலுத்த தவறியுள்ள நுகர்வோருக்கு, எஞ்சியுள்ள கட்டணத்தை செலுத்துவதற்காக 03 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (17) பிறப்பிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய 03 மாதங்களுக்குள் தாமத கொடுப்பனவை செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தேசிய கட்டமைப்பிலிருந்து இவர்களுக்கு கிடைக்கும் மின்சார விநியோகத்தை துண்டித்து, அவர்களிடம் காணப்படும் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 03 மாதங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, மாற்று நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நேற்று (16) மாலை மின்னஞ்சலூடாக கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது, நடைமுறை சாத்தியமற்றது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி ரோஹாந்த அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டிகளை செயலிழக்கச் செய்யுமாறும் தனியார் பிரிவுகளில் பிரத்தியேக மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துமாறும் அறிவிக்கும் பட்சத்தில் இந்த செயற்பாடுகளை கண்காணிப்பதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
மூலம் - நியூஸ்பெஸ்ட்