பாடசாலை காலத்தை 2 மணித்தியாலத்தால் அதிகரிக்க யோசனை முன்வைப்பு

பாடசாலை காலத்தை 2 மணித்தியாலத்தால் அதிகரிக்க யோசனை முன்வைப்பு

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளில் விருப்பமான மாணவர்கள் மாத்திரமன்றி அனைத்து மாணவர்களும் நாள் ஒன்றுக்கு ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என கல்வி அமைச்சிடம் நாங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
 
பாடசாலைகளில்தான் மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்த முடியும். இது கல்வி அமைச்சின் பொறுப்பாகும்.  இதனை எவ்வாறு நடைமுறை ரீதியாக சாத்தியமாக்குவது என்பது தொடர்பில் கல்வி அமைச்சுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
 
முடியுமானால் பாடசாலை காலத்தை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முன்னெடுத்து, இறுதி 2 மணித்தியாலங்கள் விளையாட்டுக்காக ஒதுக்க முடியும்.
 
பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் மாணவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே பெற்றோர்கள் வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பிள்ளைகளை அழைத்து செல்லக்கூடிய ஒரு முறைமை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்  என விளையாட்டுத் துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image