15 தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களை நாட்டுக்கு மீள அழைக்க தீர்மானம்
வெளிநாட்டு தூதுவர்கள் சேவைக்காக கடந்த அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் நியமனம் வழங்கப்பட்டுள்ள 15 வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கிணங்க ஜனாதிபதியின் செயலாளரினால் வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவித்தலின்படி மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி அவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க,
இந்தியாவுக்கான உயஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த ஷேணுகா செனவிரத்ன,
பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை தளபதியான ரவீந்திர விஜேகுணரத்ன,
ஜப்பானிய தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த ரொட்னி பெரேரா,
மலேசியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் விமானப்படை தளபதியான சுமங்கல டயஸ்,
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த சித்ராங்கனி வாகீஸ்வர,
கென்யாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த வீ.கனகநாதன்,
கியூபாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை தளபதியான நிசாந்த உலுகேதென்ன,
சீஷெல்ஸுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரின் சகோதரரான ஷிமால் விக்கிரமசிங்க,
நேபாளத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் விமானப்படை தளபதியொருவரான சுதர்சன பத்திரன,
பிரிட்டனுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் வெளிவகார அமைச்சரான ரோஹித போகொல்லாகம,
ஈரானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த மொகமட் ஷாஹிட்,
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த உதய இந்திர ரத்ன,
ஆகிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களையே இவ்வாறு நாட்டுக்கு திருப்பியழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர்களது சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அவர்களுக்கு கடிதங்கள் மூலம் வெளிவிவகார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் - தினகரன்
அதேவேளை, நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸுக்கும் அது தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.