சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு 15,000 ரூபா சம்பள உயர்வு!

சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு 15,000 ரூபா சம்பள உயர்வு!

சம்பள அதிகரிப்பு கோரும் சிறைச்சாலை அதிகாரிகளின் கோரிக்கையை நியாயமானது. அதனால் அவர்களுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு 20 ஆம் திகதி திங்கட்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொழும்பு உட்பட பல சிறைச்சாலைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் திங்கட்கிழமை (20) நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தவேண்டிய  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சந்தேக நபர்களை நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்தாமல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைச்சாலை அதிகாரிகள் நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டவர்கள். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தாெடர்புடைய அதிகாரிகளுக்கு தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட முடியாது. அதனால் நீதிமன்றத்துக்கான பொறுப்பை நிறைவேற்ற தவறியமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக எந்தவகையில் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவிக்க முடியாது.

2013ஆம் ஆண்டுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இருக்கும் அதிகாரிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் சமமான முறையில் சம்பள அதிகரிப்பு இடம்பெற்றிருந்தது. என்றாலும் 2013க்கு பின்னர் பொலிஸ் சேவையில் உள்ள அதிகாரிகளுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டபோதும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அது இடம்பெறவில்லை. அதனால் சம்பள முரண்பாடு ஒன்று இருக்கிறது. இந்த முரண்பாடு தாெடர்பாக நாங்கள் பல தடைவைகள் கலந்துரையாடினோம். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் 2013 ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை நாங்கள் சமர்ப்பித்தோம்.

சிறைச்சாலை அதிகாரிகள் 20,000 ரூபா கொடுப்பனவை கோரி இருந்தனர். என்றாலும் அமைச்சின் பெயலாளர், சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுடன் கலந்துரையாடினோம். இதன்போது 20,000 ரூபா கொடுப்பனவுக்கு பதிலாக 15,000 ரூபா கொடுப்பனவாக பெற்றுக்கொடுக்க பிரேரித்தோம். என்றாலும் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவாக வழங்க அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

என்றாலும் சிறைச்சாலை அதிகாரிகளின் கொடுப்பனவு தொடர்பில் பல் சந்தர்ப்பங்களில் நாங்கள் கலந்துரையாடினோம். அவர்களின் சம்பள பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.அவர்களின் கோரிக்கை நியாயமானது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். என்றாலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்- அதனால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற 15ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழங்குவதற்காக  அமைச்சரவைக்கு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம்.

சிறைச்சாலை அதிகாரிகளின் கோரிக்கைக்கு நீதி, நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம், என்றாலும் நீதிமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் இயலுமை அவர்களுக்கு  இல்லை. சிறைச்சாலை அதிகாரிகள் 20 ஆம் திகதி திங்கட்கிழமை சேவைக்கு வந்து, சந்தேக நபர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்வதை நிராகரித்துள்ளனர். அவர்களின் இந்த நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image