சம்பள விடயம் தொடர்பில் 12ஆம் திகதி பேச்சு: ஜீவன் எம்.பி தெரிவிப்பு

சம்பள விடயம் தொடர்பில் 12ஆம் திகதி பேச்சு: ஜீவன் எம்.பி தெரிவிப்பு

‘‘பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் குறித்து எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபையுடன் கலந்துரையாட உள்ளதாக இ.தொ.கா.பொதுச் செயலரும் நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு, வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(06) இடம்பெற்ற மாத்தறை நில்வலா கங்கை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர்நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

பெருந்தோட்ட மக்களுக்கு 1,700ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் இன்றும் உறுதியாக உள்ளது. வர்த்தமானி வெளியிட்டதன் பின்னர் பெருந்தோட்ட கம்பனிகள் வர்த்தமானிக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு சென்று இடைக்கால தடையுத்தரவு பெற்றுக்கொண்டார்கள். இதன் பின்னர் நாங்கள் வர்த்தமானியை வாபஸ் பெற்றோம். இதனை தொடர்ந்து தோட்டக் கம்பனிகள் வழக்கை வாபஸ் பெற்றன.

எதிர்வரும் 12ஆம் திகதி சம்பள நிர்ணய சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். நியாயமான சம்பளத்தை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன். வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவேன். 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று குறிப்பிட்ட போது எனக்கு அரசியல் அனுபவம் போதாது என்று என்னை விமர்சித்தார்கள். ஆனால் ஆறு மாத காலத்துக்குள் 1000 ரூபாவை பெற்றுக்கொடுத்தேன். வழங்கிய வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். சம்பள விவகாரத்தை கொண்டு நான் அரசியல் செய்யவில்லை. - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image