1000 ரூபா சம்பளம் - திகாம்பரத்தின் கேள்விக்கு ரமேஷ் பத்திரன பதில்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையைத் தீர்க்க கூட்டு ஒப்பந்தம் வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (10) நடைபெற்ற பெருந்தோட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கேட்டறிந்தார்.
இது தற்போது நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ள பிரச்சினை என்பதால் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்துள்ள போதிலும், தம்மைப் பொறுத்தவரை, இந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு கூட்டு ஒப்பந்தம் வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஷ்பகுமாரவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில்துறையின் அபிவிருத்திக்காக எந்தவொரு முறைகேடுகளையும் தடுப்பதற்கு தமது அமைச்சு முடிந்தளவு முயற்சியை எடுக்கும் என்றும், அத்துமீறி நடந்துகொள்ளும் எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, குருநாகல் மாவட்டத்தில் தென்னங்கன்று நாற்றுக்களை உருவாக்கும் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல முன்வைத்த முன்மொழிவின் பேரில் தேங்காய் எண்ணெய் அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் துருவல் இயந்திரங்களை விநியோகிக்கும் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்க, மாத்தறை நில்வலா பிரதேசத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருக்கும் நெல் வயல்களில் தென்னை உற்பத்தியை துரிதப்படுத்தும் திட்டம் போன்ற யோசனைகளுக்கும் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அங்கீகாரம் வழங்கியது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, சிவஞானம் சிறிதரன், பழனி திகம்பரம், எம்.ராமேஸ்வரன், சம்பத் அத்துகோரல, வீரசுமண வீரசிங்க, அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோர் கலந்துகொண்டனர்.