பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாள் சம்பளம்: அமைச்சர் அறிவித்த காலக்கெடு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாள் சம்பளம்: அமைச்சர் அறிவித்த காலக்கெடு!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும்.

நாட்சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை பெறமுடியும் - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று (14.03.2024) வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஆயிரம் ரூபா கிடைப்பது சிரமம், அது கிடைத்தால் பல்வேறு பிரச்சினைகள் சேர்ந்து வரும் எனவும், நாட்கூலி முறைமைக்கு பதிலாக நிரந்தர தீர்வொன்று அவசியம் எனவும் நாம் வலியுறுத்தினோம். அன்று நாம் பொய்யுரைத்தோம் எனக் கூறினர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

எது எப்படி இருந்தாலும் எதிர்வரும் 30 நாட்களுக்குள் ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும். ஆனால் நிரந்தரமான தீர்வு பொறிமுறையொன்றே எமது இலக்காக இருக்கின்றது.

இந்திய வீட்டுத் திட்டத்தில் அரசியல் செய்கின்றோம் என அரசியல் பிரமுகர் ஒருவர் எனக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.  2015, 2019 காலப்பகுதியில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது வீடுகள் வழங்கப்படுவது அரசியலா? தோட்டத்தில் வேலை செய்தால் அல்ல தோட்டத்தில் பிறந்திருந்தாலேயே வீடுதான் என்ற நிலைமையை ஏற்படுத்தியது அரசியலா? பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது அரசியலா? தோட்ட சேவையாளர்கள், ஆசிரியர்கள், கலைஞர்களுக்கும் தனி வீடுகளை வழங்குவது அரசியலா?

மலையக மக்களுக்கு குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் எவ்வளவு பாடுபட்டிருப்பார், காங்கிரஸின் தலைவர்கள் எவ்வாறு போராடி இருப்பார்கள், ஆனால் ரணசிங்க பிரமேதாசவே அதனை வழங்கினார் என சிலர் கூறுகின்றனர். இந்தா பிரஜா உரிமை என அவர் சும்மா வழங்கினாரா? அரசியலில் போட்டி இருக்கலாம், ஆனால் சுயநல அரசியலுக்காக வரலாற்றை விற்க முற்படுவது கேவலம்.

மலையகத்தில் 176,000 குடும்பங்களுக்கு சௌமியபூமி காணி உரிமை வழங்கும் திட்டம் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன தினத்தன்று ஆரம்பமாகும். 200 வருட வலி இன்னும் இரு மாதங்களில் நீங்கும்.”  என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image