'தேர்தல் செலவு மீட்டர்' பிரசார நிதி அவதானிப்புக் கருவி

'தேர்தல் செலவு மீட்டர்' பிரசார நிதி அவதானிப்புக் கருவி

“Chanda Salli Meetare”: தேர்தல் செலவு மீட்டர்" பிரசார நிதி அவதானிப்புக் கருவியின் வெளியீடு.

இலங்கையில் முதல் முறையாக, ஆறு முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (CaFFE), தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV), ஹேஷ்டேக் தலைமுறை, மற்றும் ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிலையம் (IRES) ஆகியவை ஒன்றிணைந்து 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் வேட்பாளர்களின் பிரசார செலவுகளைக் கண்காணிப்பதற்காக பிரசார நிதி அவதானிப்பு இணையவழிக் கருவியை உருவாக்கியுள்ளன.

“Chanda Salli Meetare”: தேர்தல் செலவு மீட்டர் என்பது இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரசார நிதி அவதானிப்பு கருவியாகும். இந்த கருவியானது இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை (REEA) திறம்பட நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்த மற்றும் தங்கள் வாக்களிப்பு முடிவுகளை எடுக்கத் தேவையான தகவல்களை வழங்குதல், ஜனாதிபதி வேட்பாளர்களிடையே சமநிலையை உறுதிப்படுத்துவதற்கும், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்தும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் சூழலை வளர்ப்பதற்கும் அவசியமான தகவல்களை பிரஜைகளுக்கு வழங்கி வலுவூட்டுவதையும் இது இலக்காகக் கொண்டுள்ளது.

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஆகஸ்ட் 16 கொழும்பிலுள்ள BMICH இல் இந்த பிரசார நிதி அவதானிப்பு கருவி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நதிஷானி பெரேரா, TISL இன் நிறைவேற்றுப் பணிப்பாளர்; மஞ்சுள கஜநாயக்க, நிறைவேற்றுப் பணிப்பாளர், ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிலையம் (IRES); சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், இலங்கை தேர்தல் ஆணைகுழு (ECSL); ரோஹன ஹெட்டியாராச்சி, PAFFREL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்; கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, நிறைவேற்றுப் பணிப்பாளர் - மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA); மனாஸ் மக்கீன், நிறைவேற்றுப் பணிப்பாளர் - சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (CaFFE); மற்றும் ஹேஷ்டேக் தலைமுறையின் நிபுணர், தர்ஷத கமகே ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்த கூட்டு முயற்சியானது இலங்கையின் தேர்தல் செயன்முறைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவிக்கும் நீண்ட கால இலக்குகளுக்குப் பங்களிக்கும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரங்களில் பணத்தின் பங்கு மற்றும் வாக்காளர் முடிவுகளில் அதன் செல்வாக்குக் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அது பிரத்தியேக இணையத்தளமான 'chandasallimeetare.lk' மூலம் பிரசார நிதியைக் கண்காணிப்பதில் பிரஜைகளின் ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது.

இந்த இணையதளத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் சுயவிவரங்களைக் காண்பிப்பதோடு, அவர்களது தேர்தல் செலவினங்கள் குறித்த மதிப்புமிக்க நுட்பநோக்குகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட செலவு வகைகளாகப் பிரித்துக் காண்பிக்கிறது. அதாவது, பிரதான ஊடகங்கள், சமூக ஊடகங்கள், விளம்பரப் பலகைகள் மற்றும் கட்அவுட்கள், பொது நிகழ்வுகள், ஊடகவியலாளர் சந்திப்புகள், வெளியீட்டு விழாக்கள் மற்றும் பிரசார அலுவலகங்களுக்கான செலவினங்கள் என அது வகைப்படுத்தியுள்ளது. சுயவிவரங்களில் வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்கள், தேர்தல் அறிக்கை மற்றும் அவர்களின் பாராளுமன்றச் செயற்பாடுகளைப் பார்ப்பதற்கான வெளிப்புற ஆதாரங்களுக்கான இணைப்புகள் போன்றவை பொதுவில் கிடைக்கக்கூடிய வகையில் உள்ளடங்கியிருக்கும்.

பிரசாரச் செலவினம் ஒவ்வொரு வகைக்கும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சராசரி செலவுகள் மற்றும் சூத்திரங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்கள் சார்ந்த பிரசாரங்களைக் கண்காணிப்பதற்கு அப்பால், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தந்த தொகுதிகளில் உள்ள தேர்தல் செலவினங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பார்கள். வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் இந்த இணையதளம் பிரஜைகளுக்கு வழங்குகிறது.

கருவியின் பின் தள அமைப்பைக் கையாள, பிரசார நிதி நிபுணர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு பிரத்யேக குழுவைக் கொண்ட ஒரு செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பிரஜைகள் சமர்ப்பித்த அனைத்துத் தரவுகளும், "Chanda Salli Meetare - தேர்தல் செலவு மீட்டர்" மூலம் பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் சரிபார்க்கப்படும்.

தேர்தலுக்குப் பிறகு அனைத்து வேட்பாளர்களும் கட்சிகளும் தேர்தல் ஆணைக்குழுவிடம் தமது வருமான அறிக்கைகளை (நிதி அறிக்கைகள்) சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்தக் கருவியை நடைமுறைப்படுத்துவதன் மூலம், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் கூட்டாக மேற்கொள்ளப்பட்டு, இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்ட தேர்தல் நிதி கண்காணிப்பு முடிவுகளுடன், தேர்தல் அறிக்கையில் உள்ள நிதித் தரவுகளை ஒப்பிட முடியும்.

செலவினங்களைக் கண்காணிக்கும் பரப்பு, இந்த அமைப்புகளின் திறன்களுக்குள் கண்காணிக்கக்கூடிய சில முக்கிய செலவு வகைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்படும் என்பதால் ஒவ்வொரு வேட்பாளரின் செலவினங்களையும் முழுமையாக அது பிரதிபலிக்காது. ஜனாதிபதித் தேர்தலில் முதன்முதலில் செயல்படுத்தப்படும் இந்தக் கருவி, எதிர்வரும் மற்ற தேர்தல்களுக்கும் பொருந்தும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கையடக்கத் தொலைபேசிகள் அல்லது கணினிகள் மூலம் அணுகக்கூடிய பயனர் நயமிக்க இணையதளம் வாயிலாக, அந்தந்தப் பகுதிகளில் பிரசார நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சமர்ப்பிப்பதன் மூலம், வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் இந்த செயன்முறையில் ஈடுபடுமாறும், ஆதரவளிக்குமாறும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றன. அதே சமயம், தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை முறையாகப் பின்பற்றுவதன் மூலம் முன்மாதிரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அவர்களின் திறனை வெளிப்படுத்துமாறு அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image