பொருளாதார நீதியை வழங்க அரசாங்கத்திற்கு சுகாதாரத்துறை முன்வைக்கும் யோசனை

பொருளாதார நீதியை வழங்க அரசாங்கத்திற்கு சுகாதாரத்துறை முன்வைக்கும் யோசனை
சுகாதாரத் துறையினருக்கு பொருளாதார நீதியை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளது.
 
சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
 
சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிபாபுறக்கணிப்பு கைவிடப்பட்டமை தொடர்பில் நேற்று (18) கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
 
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பை மீண்டும் நாளை (19) காலை 6:30 மணியிலிருந்து தொடங்குவதற்கு தீர்மானித்திருந்தோம்.
 
எமது பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சு சாதகமான தலையீட்டை மேற்கொண்டு இருந்தது.
 
எனினும், தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் தற்போது ஒரு வார காலமாகியும் நிதி அமைச்சு எவ்விதமான கவனத்தையும் செலுத்தி இருக்கவில்லை.
 
இதன் காரணமாகவே பணிப்புறக்கணிப்பை மீள ஆரம்பிக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை அடுத்த வாரமளவில் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக சுகாதார அமைச்சு எமக்கு எழுத்து மூலம் அறியபடுத்தி உள்ளது.
 
இந்த கலந்துரையாடலை உடனடியாக வழங்குவதை விடவும், தீர்வு வழங்கக்கூடிய அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்க வேண்டும் என்பதால் அதற்கு குறிப்பிடத்தக்க காலத்தை வழங்க வேண்டும். 
 
எனவேதான் இந்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
நிதி அமைச்சுக்கு சுமை ஏற்படுத்தாத வகையில் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர சுகாதார அமைச்சு முயற்சி எடுத்து வருகின்றது. 
 
அரசாங்கத்தை தோல்வியடைய செய்யவோ அல்லது வெற்றியடைய செய்யவோ எமக்கு அவசியம் இல்லை.  தொழிற்சங்கத்தினர் என்ற அடிப்படையிலும் சுகாதாரத் துறையினர் என்ற அடிப்படையிலும் எமது பிரச்சினைக்கான நீதிகோரி, 
எந்தவித அரசியல் அடிப்படையுமின்றி
சுயாதீனமாக நாம் போராடுகின்றோம். 
 
இந்த தொழிற்சங்க  போராட்டத்துக்குள் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாக்களிப்பவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அந்த வகையிலேயே எதிர்காலத்தில் தமது கட்சிகளுக்காக வாக்களிப்பதுடன், வேலை செய்வார்கள்.  எனினும் இந்த சுகாதார தொழிற்சங்க துறைக்குள் எவரும் தங்களுடைய தனிப்பட்ட அரசியலை நடத்திக்கொண்டு செல்வதில்லை. அதற்கு இடமளிக்கப்படுவதும் இல்லை. 
 
சுகாதாரத் துறைக்கு பொருளாதார ரீதியாக அநீதி இழைக்கப்பட்டது. பொருளாதார நீதி கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்பதை தெளிவாக கூற வேண்டும்.
 
சுகாதார பணிக்குழுவினரில் நான்கில் மூன்று பங்கினரும், ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுகாதார பணிக்குழாமினரும், ஒரு இலட்சம் குடும்பங்களும் இதனுடன் பிணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து தொழிற்சங்கங்களும் எம்முடன் உள்ளன. 
 
தொழிற்சங்க பலம் தொடர்பில் எமக்கு சிறந்த மதிப்பீடு உள்ளது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பணிபுறக்கணிப்புக்கோ அல்லது போராட்டத்திற்கோ செல்ல முடியும். எனினும் எமக்கு அவ்வாறான நோக்கமில்லை என்பதால், நாங்கள் அதனை அச்சுறுத்தும் ஆயுதமாக பயன்படுத்துள்ளோம்.
 
இலங்கையில் சுகாதாரத் துறைக்கு பொருளாதார நீதியை நிலைநாட்டுவதற்காக நான்கு பில்லியன் ரூபாய் தேவை.  வைத்தியர்களுடன் சேர்த்து பொருளாதார நீதியை நிலைநாட்டுவதற்கு 10 பில்லியன் ரூபாய் தேவை.  மருந்து மோசடியின் காரணமாக 20 பில்லியன் ரூபாவை மீள அளவிட வேண்டிய இயலுமை அரசாங்கத்திற்கும் சுகாதார அமைச்சுக்கும் இருக்கின்றது. 
 
எனவே பணம் இல்லை என்று கூற வேண்டாம். நீங்கள் செயல்திறன் மிக்கவர்கள் அல்லது முறையை மாற்றி உள்ளீர்கள் என்றால் இந்த 20 பில்லியன் ரூபாவை மீள அறவிட்டு எமக்கு பொருளாதார நீதியை நிறைவேற்றுங்கள்.
 
ஏனெனில் இந்த நாட்டின் சுகாதாரத் துறையினரதும், சுகாதாரத் துறையில் சேவையை பெறும் பொதுமக்களினதும் பணம்தான் இங்கே சுரண்டப்பட்டுள்ளது. எனவே இதனை மீள அறவிட வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். -  ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image