இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகளவிலான பெண் உறுப்பினர்கள் தெரிவான தேர்தலாக இந்த முறை நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகளில் பிரகாரம், இந்த முறை நாடாளுமன்றத்திற்கு 21 பெண்கள் தெரிவாகியுள்ளனர்.
இவ்வாறு தெரிவான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானோர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக பெண்கள், இந்த முறை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
பதுளை, நுவரெலியா மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலிருந்து இந்த பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு
பதுளை மாவட்டத்திலிருந்து அம்பிகா சாமுவேல், நுவரெலியா மாவட்டத்திலிருந்து கிருஸ்ணன் கலைச்செல்வி மற்றும் மாத்தறை மாவட்டத்திலிருந்து சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் மலையகத்திலிருந்து தெரிவாகியுள்ளனர்.
இலங்கை அரசு சபை 1931-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, முதல் பெண் பிரதிநிதியாக அடெலின் மொலமுரே தெரிவானார்.
பின்னர் உலகின் முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தெரிவானார்.
இலங்கை வரலாற்றில் பெண்கள் அரசியலில் ஈடுபடுகின்றமை தற்போது படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பெண் பிரதிநிதித்துவத்தில், 1989-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை சற்று அதிகரிப்பு காணப்பட்டாலும், இந்த முறை நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் மிக அதிகளவில் உயர்ந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டு, தற்போது பிரதமராக பதவி வகித்து வருவதுடன், இம்முறை தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற பெண் வேட்பாளராகவும் அவர் திகழ்கின்றார்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற பெண்ணாகவும் ஹரினி அமரசூரிய வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
இந்த முறை தெரிவான பெண் பிரதிநிதிகளின் விபரங்கள்
கொழும்பு மாவட்டத்திலிருந்து ஹரினி அமரசூரிய, கௌசல்யா ஆரியரத்ன, சமன்மலி குணசேகர ஆகியோர் தெரிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலிருந்து ஹேமாலி குணசேகர தெரிவாகியுள்ளார்.
களுத்துறை மாவட்டத்திலிருந்து நிலந்தி கொட்டஹச்சி, ஓஷானி உமங்கா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
கண்டி மாவட்டத்திலிருந்து சமிந்திராணி கிரியெல்ல, துஷாரி ஜயசிங்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
மேலும், மாத்தளை மாவட்டத்திலிருந்து தீப்தி வாசலகே, ரோஹிணி குமாரி கவிரத்ன ஆகியோர் தெரிவாகியுள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்திலிருந்து அனுஷ்கா தர்ஷனி திலகரத்ன, கிருஸ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
காலி மாவட்டத்தில போட்டியிட்ட ஹசாரா லியனகேவும், மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து நிலுஷா லக்மாலி மற்றும் கேகாலை மாவட்டத்திலிருந்து சாகரிக்கா கங்காணி ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
அத்துடன், தேசிய பட்டியல் ஊடாக தேசிய மக்கள் சக்தி சார்பில் லக்மாலி காஞ்சனா ஹேமசந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
பதுளை மாவட்டத்திலிருந்து இலங்கை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அம்பிகா சாமுவேல்
‘மலையக தோட்டத் தொழிலாளியின் மகள்’
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக பெண்ணான கிருஸ்ணன் கலைச்செல்வி கருத்து தெரிவித்தார்.
''நான் மலையகத்தில் பிறந்த தோட்டத் தொழிலாளியின் பிள்ளை என்ற ரீதியில், மலையக மக்கள் முகம் கொடுக்கின்ற பாரிய பிரச்னைகள் இருக்கின்றது. மலையக மக்கள் இந்த நாட்டில் மனிதர்களாக உள்வாங்கப்படாத நிலைமையே இவ்வளவு நாளும் இருந்தது. இந்த நாட்டிற்கு உழைத்து கொடுக்கும் மக்களாக மாத்திரமே எங்களை அரசியல்வாதிகளும், தொழிற்சங்கவாதிகளும் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.” என்று கூறுகிறார் கலைச்செல்வி.
தொடர்ந்து பேசிய அவர், “பெரிய சவால் ஒன்று இருக்கின்றது. இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது இலகுவான காரியம் அல்ல. மிகவும் கடினமான காரியம். அதை கட்டாயமாக நாங்கள் செய்வோம். சவால் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்திக்கு மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கட்டாய தேவை இருக்கின்றது.” என்கிறார்.
இந்த மக்களின் பிரச்னையை தான் தனியாக தீர்க்க போவதில்லை என்று கூறும் கலைச்செல்வி, “எங்களுடைய அமைப்பினால் இந்த மக்களின் பிரச்னையை நாங்கள் தீர்ப்போம். மலையக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது" எனக் கூறுகின்றார்.
மலையகத்தில் முதல் தடவையாக பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கிருஸ்ணன் கலைச்செல்வி தெளிவூட்டினார்.
''பெண்கள் மாத்திரமன்றி, மலையகத்திலுள்ள ஆண்கள், இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளன. மலையகத்தில் படித்த இளைஞர், யுவுதிகள் தகுதியான வேலை வாய்ப்பின்றி, புடவை கடைகள், இரும்பு கடைகளில் வேலை செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.”
கல்வி, சமூக, கலாசார, சுகாதார உள்ளிட்ட சகல பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கானவே நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். என்று கூறும் கலைச்செல்வி, ''பெண்களுக்கு உழைப்பு ஏற்ற வருமானம் கிடைக்க வேண்டும். வேலைகள் செய்வதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். சமூக ரீதியாகவும். பாலியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்ற பெண்களை பாதுகாக்க வேண்டும். இதற்கான அனைத்து திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம்." என்று கூறுகின்றார்.
சிங்கள பெரும்பான்மை மாவட்டத்திற்கு முதல்முறையாக தமிழ் பிரதிநிதி
சரோஜா சாவித்திரி போல்ராஜ் தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவாகரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்
இதேவேளை, பெரும்பான்மை சிங்கள சமூகத்தினர் வாழ்கின்ற மாத்தறை மாவட்டத்தில் இந்த முறை முதல் தடவையாக தமிழ் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ் பெண்ணான சரோஜா சாவித்திரி போல்ராஜ் மாத்தறை மாவட்டத்தில் தெரிவான முதலாவது தமிழ் மக்கள் பிரதிநிதியாக வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, சரோஜா சாவித்திரி போல்ராஜ் தற்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவாகரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவாகரத்துறை அமைச்சராக, தனது திட்டங்கள் குறித்து சரோஜா சாவித்திரி போல்ராஜ் எடுத்துரைத்தார்.
''பெண் பாதுகாப்புடைய சமுதாயம் என்ற வகையில், பாலியல் ரீதியான விடயங்களிலிருந்தான பாதுகாப்பு மாத்திரம் அல்ல. ஒரு பெண்ணை எடுத்துக்கொண்டால், அவரை பொருளாதாரத்தில் பலப்படுத்த வேண்டும். பொருளாதார பாதுகாப்பு இருக்க வேண்டும்.” என்று வலியுறுத்துகிறார் சரோஜா.
மேலும், “சமூக அங்கீகாரம் கிடைக்க வேண்டும். சமூக பாதுகாப்பும் இருக்க வேண்டும். இந்த விடயங்கள் உள்ள சமுதாயம் காணப்படும் பட்சத்தில் மாத்திரமே பாலியல் ரீதியான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். இல்லாவிட்டால், இந்த பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கும்.” என்கிறார் அவர்.
பாதுகாப்பு இல்லாத சமூகமும், பொருளாதாரத்தில் பாதுகாப்பு இல்லாத தன்மை காரணமாகவும் வேறொருரை நம்பி வாழ வேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டும் சரோஜா, “பெண்கள் சமுகத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், பொருளாதார உரிமைகளை வழங்க வேண்டும்” என்று கூறுகிறார்.
பொருளாதார பாதுகாப்பு மற்றும் சுயாதீன தன்மை காரணத்தினால் மாத்திரமே பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என தான் நம்புவதாக கூறுகிறார் சரோஜா.
“எல்லா தனிப்பட்ட நபர்களுமே ஒரு சுயாதீன நபர்களாக இருக்கும் போது, திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமா, இல்லையா, தனியாக வாழ முடியுமா இல்லையா, தன்னுடைய கல்வியை தீர்மானிக்க முடியுமா? நாங்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வோமா? இல்லையா? இதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு தான் இருக்கின்றது.” என்கிறார் அவர்.
“அதனை தீர்மானிக்கும் உரிமையை இன்னொருவருக்கு வழங்க வேண்டிய இடத்திற்கு தள்ளப்பட காரணம் பொருளாதார ரீதியில் சுயாதீனமாக இல்லாததால்தான், எனவே அதை வழங்க வேண்டியுள்ளது." என சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவிக்கின்றார்.
மூலம் - பிபிபி தமிழ் (இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு)