தலவாக்கலை தோட்டத் தொழிலாளர்களும், சேவையாளர்களும் பணி பகிஷ்கரிப்பு

தலவாக்கலை தோட்டத் தொழிலாளர்களும், சேவையாளர்களும் பணி பகிஷ்கரிப்பு

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள்

இன்று (29) புதன்கிழமை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை காலை 9 மணியளவில் தலவாக்கலை – அட்டன் பிரதான பாதையில் தலவாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக நடாத்தினர்.

கடந்த மாதம் தொடக்கம் தோட்ட முகாமைக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை தோட்ட தொழிலாளர்களுக்கும், தோட்ட சேவையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றதன் காரணமாக தாக்குதலில் படுகாயம் அடைந்த தோட்ட சேவையாளர்கள் இருவரும் தோட்டத் தொழிலாளர்கள் இருவரும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், தாக்குதலை நடாத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து இன்றைய ஆர்ப்பாட்டத்தை தோட்ட சேவையாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.

தாம் தோட்ட நிர்வாகத்தினால் பெருந்தோட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் கடமைகளையும் வேண்டுகோளையும் மாத்திரமே நிறைவேற்றி வருவதாகவும் இதுவரை காலமும் தொழிலாளர்களுக்கும் தமக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்பட்ட போதிலும் கடந்த சில மாதங்களாகவே இரு தரப்பினருக்கும் இடையில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஏனெனில் தற்போது கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாததன் காரணமாக சம்பள நிர்ணய சபையின் ஊடாகவே தொழிலாளர்களுக்கான சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்ட கம்பெனிகளால் வழங்கப்படும் உத்தரவுக்கு அமையவே தாம் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும், அதற்கு எதிராகவே தொழிலாளர்கள் தம்முடன் முரண்பாடுகளில் ஈடுபடும் அதேநேரத்தில் கைகலப்பில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட சேவையாளர்கள் குற்றம் சுமத்தினர்.

மேலும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதும் அவர்களின் பிரச்சினைகளை முறையாக பேசி விசாரணைகளை முன்னெடுப்பதில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம்  இருப்பதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தம்முடன் நேரடியாக பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு தொழிலாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும், தமது பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்கங்கள் கூட்டாக தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி அதன் மூலமே தீர்வுகளை முறையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தோட்ட சேவையாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் தொழிற்சங்கவாதிகள் அல்லது நுவரெலியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் உரிய முறையில் தீர்வுகளை முன்னெடுக்காமையின் காரணமாகவே தற்போது பெருந்தோட்டங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்திய வண்ணம் கோஷம் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதோடு தமக்கான நீதியை பெருந்தோட்ட நிறுவனம் உடனடியாக  பெற்றுத்தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அத்தோடு தமக்குரிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் தலவாக்கலை தோட்டத்தின் கட்டுக்கலை தோட்ட பிரிவின் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்ததோடு இன்றைய தினம் தலவாக்கலை தோட்டம் முழுவதும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாது பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் அதே நேரத்தில் தோட்ட சேவையாளர்களும் பணிக்கு செல்லாது பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image