இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த கொட்டியாகலை தொழிலாளர் உண்ணாவிரதம்
பொகவந்தலாவை - கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் நேற்று (01) இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
1,000 ரூபா நாளாந்த சம்பளம் பெறுவதற்காக, 18 கிலோ கொழுந்தை பறிக்க தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்சாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் நேற்று முன்தினம் காலை ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 5 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நேற்று மேலும் இருவர் இணைந்துள்ளனர்.
தோட்டத்தில் தேயிலை பறிக்கக்கூடிய குறிப்பிட்ட காணிப்பரப்பில், நாள் ஒன்றுக்கு 13 கிலோ கொழுந்தை மாத்திரம் தங்களால் பறிக்க முடியுமென தோட்ட நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இதனை அறிவித்ததன் பின்னர், கடந்த மூன்று மாதகாலமாக தோட்ட நிர்வாகம் வாரத்திற்கு ஒருநாள் மாத்திரமே வேலை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து, அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோருக்கு தாங்கள் கடிதம் அனுப்பியுள்ளபோதிலும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமையால், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நாளொன்றுக்கு 13 கிலோ கொழுந்தை பறிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த தரப்பினர், தோட்ட நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வரையில், தங்களின் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.