மலையகத்துக்கான 10,000 வீட்டுத் திட்டம்: இ.தொ.கா வெளியிட்ட தகவல்

மலையகத்துக்கான 10,000 வீட்டுத் திட்டம்: இ.தொ.கா வெளியிட்ட தகவல்

'மலையகத்துக்கான 10,000 வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். கொரோனா நெருக்கடி நிலைமை இருந்தாலும் மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது.' - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

ராமேஷ்வரன் எம்.பியின் 45வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு நேற்று (26) நுவரெலியா பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் கார்லபேக் தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அவரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் இன்று அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்நிலைமை மாறுவதற்கும் கல்வியே எமக்கு கைகொடுக்கும். எமது பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் கண்டால் நிச்சயம் வீறுநடை போடலாம். அதற்கு பக்கபலமாக காங்கிரஸ் துணை நிற்கும்.

கொரோனா நெருக்கடி காலத்திலும் நாட்டுக்கு தேவையான முக்கியமான அபிவிருத்தி திட்டங்கள் நிறுத்தப்படவில்லை. அதற்கான பணிகளை நிதி அமைச்சர் சிறந்த முறையில் முன்னெடுத்து நிதி ஒதுக்கீடுகளை வழங்கிவருகின்றார். மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதில் ஒரு சில தோட்டக்கம்பனிகள் இழுத்தடிப்பு செய்துவருகின்றன. இது தொடர்பில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே, விரைவில் சாதகமான சூழ்நிலை உருவாகும்.' - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image