எரிபொருள் விலையேற்றம் - தட்டுப்பாடும்: ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களின் நிலையும்

எரிபொருள் விலையேற்றம் - தட்டுப்பாடும்: ஒன்றரை இலட்சம் சுகாதார ஊழியர்களின் நிலையும்

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் ஒன்றரை இலட்சம் சுகாதார பணியாளர்கள் தற்போது பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர் என சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை தாதிய உத்தியோகத்தர் சங்கம் என்பன அண்மையில் ஊடக சந்திப்பை நடத்தி, சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.

Bandara.jpg

இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த பண்டார,

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் ஒன்றரை இலட்சம் சுகாதார பணியாளர்கள் தற்போது பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். கடந்;த நாட்களில் அவதானிக்கும்போது எரிபொருளுக்கு பாரிய நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான பற்றாக்குறை காரணமாக சில உத்தியோகத்தர்கள் மாதம் 30 நாட்களும் வேலை செய்கின்றனர். சிலர் 27, 28, 29 நாட்கள் என சாதாரண அரச ஊழியருக்கு இருக்கின்ற அரசு விடுமுறை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற தினங்களிலும் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இது ஊழியர்களின் விருப்பத்தின் பேரிலல்ல. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்திற்காக அதிக நாட்களும் அதிக தடவைகளும் செலவு செய்ய வேண்டிய நிலை சுகாதார ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. எனவே ஒன்றரை லட்சம் சுகாதார ஊழியர்களுக்கு இந்த எரிபொருள் விலையேற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது. மறுபுறத்தில் நாம் பார்த்தோம் இந்த அரசாங்கம் 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் பெற்றோல் 137 ரூபாவாகவும் இருந்தது. ஆனால் இன்று 254 ரூபாவாக பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசலும் அதுபோலவே அண்ணளவாக நூற்றுக்கு 80 முதல் 85 சதவீதம் அளவில் இந்த எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதற்கு சமாந்தரமாக போக்குவரத்து செலவுகளும் அதிகரித்திருக்கின்றன.

அரசு ஊழியர்களில் சுகாதார ஊழியர்கள் பணியாளர்கள் பாரிய கடன் சுமைக்கு உள்ளாகியுள்ளனர். இதற்குத் தீர்வாக ஒன்று சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அரசாங்க ஊழியர்கள் என்ற அடிப்படையில் எங்களுக்குக் கிடைக்கும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் அதிகரிக்கப்படவில்லை. எரிபொருள் விலை மட்டுமல்ல ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்திருக்கின்றன.

எனவே, சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும் அல்லது எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும் அல்லது எரிபொருட்கள் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சுகாதாரத்துறை வீழ்ச்சியடையக்கூடிய அபாயம் இருக்கின்றது.

அரசாங்கம் இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும். அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற அடிப்படையில் நாங்கள் ஜனாதிபதி இது தொடர்பில் கடிதம் அனுப்பி இருந்தோம். நீண்ட வரிசைகளில் எங்களுக்கு காத்திருக்க முடியாது. எங்களது தொழில் நிலையுடன் அத்தோடு இப்போது இருக்கின்ற செலவை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே சுகாதார துறையின் ஏனைய தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் போராட்ட நடவடிக்கைக்கு செல்ல இருக்கின்றோம்.

நாங்கள் முதலாவதாக போராட்ட நடவடிக்கைக்கு செல்வோம். நாட்டு மக்கள் பாரியளவில் துன்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சுகாதாரத் துறையில் பாரிய மருந்துகள் தட்டுப்பாடு இருக்கின்ற நிலைமைக்கு மத்தியில் நாங்கள் நோயாளர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட மாட்டோம். எனவே பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளாக செல்லமாட்டோம். ஆட்சியாளர்களுக்கு உணரும் வகையில் நாடு முழுவதும் போராட்டம் நடவடிக்கையை முன்னெடுப்போம். இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்காவிட்டால் சுகாதார ஊழியர்களை கொழும்புக்கு அழைத்து வந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கொண்டு வருவோம் - எனத் தெரிவித்துள்ளார்.

Mediwatta.jpg

இந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை தாதிய உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ் பி மெதிவத்த,

சுகாதாரத் துறையை எடுத்துக்கொண்டால் பெருமளவானோர் பொது போக்குவரத்தை பயன்படுத்தி சேவைக்கு வருவதுடன் சேவையிலிருந்து மீண்டும் வீடு திரும்புகின்றனர். எரிபொருள் விளை உயர்வால், பஸ் கட்டணம் உயர்வு, முச்சக்கரவண்டி கட்டணம் ரயில் கட்டணம் உயர்வு, உணவு பொருட்களின் விலை அதிகரிப்பினால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். மிகவும் குறைந்த சம்பளத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நிலையில் அந்த சம்பளத்தில் வாழமுடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. மறுபுறத்தில் தாதியர் சேவையில் சுழற்சி முறை தொழில்முறையானது மிகவும் ஒரு கஷ்டமான ஒரு சேவை முறையாக இருக்கின்றது.

காலை 7 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி என சேவைக்கு வருகின்றார்கள். இதேபோன்று அந்த நேரங்களில் சேவை முடிந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். இந்த நாட்டின் போக்குவரத்து சேவையில் மிகவும் கஷ்டமான நேரங்கள் இதுவாகும். வாகனங்கள் மிகக் குறைந்த அளவில் பயணிக்கும் நேரம் ஆகும். எனவே தற்போதைய எரிபொருள் பிரச்சினை காரணமாக பஸ், ரயில், முச்சக்கரவண்டி என்பன இந்த சந்தர்ப்பங்களில் இயங்குவதில்லை. எனவே இதன் காரணமாக சேவைக்கு சமூகமளிப்பது என்பது பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

எனவே இந்த சுழற்சிமுறை சேவை காரணமாக அவர்கள் உரிய நேரத்தில் வேலைக்கு செல்வதற்காக, தங்களது சொந்த பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முச்சக்கர வண்டிகளுக்கு பெருமளவான பணத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே இந்த நிலைமையை தீர்ப்பு இந்த நிலைமைக்கு சுமுகமான தீர்வு ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் விசேட திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். ஏனெனில் கடந்த வருட காலத்தில் கொரோனா பரவல் காலத்தில், சுகாதார அமைச்சினால் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டிருந்தது. தற்போதும் இதற்கு சமாந்தரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

சுகாதாரத்துறை பணி குழுவினருக்கு உரிய நேரத்தில் வேலைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அதே நேரத்தில் சேவை நிறைவடைந்து செல்லும் போதும், உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை இருக்கிறது. எனவே இந்த நிலைமையை சீர் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனத் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image