பால்நிலை சமத்துவத்தை உறுதி செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின விழா நேற்று (20) காலை பதுளை தபாற் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.விஜயசந்திரனின் மேற்பார்வையின் கீழ் மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக மகளிர் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழா மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த விழாவில் ஆரம்ப உரையை அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினரும், மலையக மகளிர் முன்னணியின் பிரதி தலைவியுமான திருமதி. சுவர்ணலதா ஆற்றியதோடு, சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னால் உதவி விரிவுரையாளர் செல்வி. குமாரசாமி தயாளனி, சிரேஷ்ட விரிவுரையாளரும், பிரபல எழுத்தாளருமான திருமதி.ராணி சீதரன் ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள். கட்சியின் நிதி செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் மற்றும் கட்சியின் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் போது மகளிரது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு, பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் சாதனையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிப்பு நிகழ்வும், இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.