36 பில்லியன் ரூபா EPF: தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டியுள்ளது

தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய 36 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி இருந்து வருகிறது.
அதனை பெற்றுக்கொள்ள புதிய தொழில் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுப்பார் எனற் நம்பிக்கை இருக்கிறது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
தொழில் திணைக்களத்தின் புதிய தொழில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்த திங்கட்கிழமை (24) தொழில் அமைச்சில் கடமைகளை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர்அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தொழில் அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தொழில் திணைக்களத்திற்கு பாரியதொரு பொறுப்பு இருந்து வருகிறது. வேலை செய்யும் மக்களுக்காக அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக புதிய தொழில் ஆணையாளர் உள்ளிட்ட பாரியாலய ஊழியர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.
ஆளும் அரசாங்கம் தொழிலாளர்களின் நலனோம்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக தொழில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் வேலைத்தலங்களில் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிறுவர் தொழிலாளர்களை அகற்றுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கு மேலதிகமாக 22ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து அறவிட வேண்டிய ஊழியர் சேமலாப நிதி பாரியதொரு தொகை இருக்கிறது. அது 36 பில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டிருக்கிறது.
அந்த பணத்தை அறிவிட்டுக்கொள்ள தொழில் திணைக்களத்துக்கு பாரியதொரு பொறுப்பு இருக்கிறது. அரசாங்கம் என்றவகையில் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்போம். புதிய தொழில் ஆணையாளர் நாயகம் இந்த அனைத்து பொறுப்புக்களையும் முன்னெடுப்பார் என நாங்கள் நம்புகிறோம்.

மூலம் - வீரகேசரி