பயங்கரவாத தடைச் சட்டம் வெகு விரைவில் நீக்கப்படும் - நீதியமைச்சர்

பயங்கரவாத தடைச் சட்டம் வெகு விரைவில் நீக்கப்படும் - நீதியமைச்சர்

பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கமைவாக பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புதிய சட்டம் உருவாக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு  அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சபையில் தெரிவித்தார்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, பயங்கரவாத தடைச் சட்டம்  நீக்கப்படும் எனவும் எதிர்வரும் தேர்தல் வரை அது இழுத்தடிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார,

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளுக்கமைய அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவ்வாறெனினும், இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்தடிப்புச் செய்யப்பட மாட்டாது.

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்பதால் இவ்விடயத்தில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இதேவேளை,பொலிஸ் மா அதிபருக்கும் பொலிஸ் ஆணைக்குழுவுக்குமிடையில் முரண்பாடு, சட்டமா அதிபருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் முரண்பாடு என தெரிவித்து எதிர்க்கட்சிகள் இன்றும் வங்குரோத்து அரசியலில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்தார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image