
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வதேச தொழிலாளர் தின செய்தி.
1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது.
இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒரு சில குடும்பங்கள் மற்றும் பரம்பரைகளால் 76 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, இந்நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் வகையில், கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இன, மத வேறுபாடின்றி இந்நாட்டின் அனைத்து மக்களும் செயல்பட்டனர்.
அந்த மக்கள் ஆணையின் அபிலாஷைகளை உணர்ந்து, நாட்டில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி செயலாற்றுகிறது. ஊழல் நிறைந்த, சிறப்புரிமை அரசியல் முறைமையால் பாதாலத்திற்குள் தள்ளப்பட்ட இந்நாட்டின் பொருளாதாரத்தை, மீட்டெடுத்து நிலையான ஆரம்பத்தை ஏற்படுத்துவதில் தற்போது நாம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் தெளிவான அறிகுறிகள் இப்போது அனைவருக்கும் தெரிகின்றன.
அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத்திட்டத்திலேயே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தமை உட்பட விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் மாத்திரமன்றி, உற்பத்தியாளர்கள், சிறிய வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் நன்மைகளை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் குடியுரிமை உரிமைகளை உறுதி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
நாளாந்தம் மாறிவரும் உற்பத்தி அற்றலுக்கு ஏற்ப நாம் அனுபவிக்கும் உரிமைகளில் ஒரு புதிய அத்தியாயத்தின் அவசியத்தை நாங்கள் காண்கிறோம். 1948 மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத டிஜிட்டல் பிரவேச உரிமைகள், சுற்றுச்சூழல் உரிமைகள் உள்ளிட்ட மாறிவரும் அரசியல் கட்டமைப்புகளின் தோற்றம் மற்றும் உலக அமைதியை அடிப்படையாகக் கொண்ட புதிய அபிவிருத்தித் தேவைகளுக்கமைய உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை இன்றைய சமூக கோருகிறது. இது குறித்த புரிதலுடன், தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை சர்வதேச தொழிலாளர் தினமான இந்த சந்தர்ப்பத்தில், நாம் மீண்டும் நினைவூட்டுகிறோம்.
சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கும் இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதி செய்து, ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி “வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை” உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதுடன் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அர்த்தமுள்ள சர்வதேச தொழிலாளர் தினத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு