காலாவதியான இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் முறை
இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்ட காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குவைத்தில் வசிக்கும் உங்களது இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாக இருப்பின் 2021.08.10 ம் திகதி முதல் தூதராகத்தின் வாயிலாக காலாவதியான உங்களது சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இச்சேவையைப் பெற நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1. தூதரகத்தினால் வழங்கப்படும் MTA 30/2 இலக்க விண்ணப்பப்படிவத்தினை கருப்பு நிற பேனையினால் மாத்திரம் பூரணப்படுத்தி சமர்ப்பித்தல் வேண்டும்.
2. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்ட காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தின் மூலப்பிரதி.
3. ஆங்கில மொழியில் பெற்றுக்கொண்ட வைத்தியச் சான்றிதழ். மருத்துவச் சான்றிதழ் குவைத் வெளிவிவகார அமைச்சினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
4. உங்களது கைவசம் உள்ள செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
5. குவைத் நாட்டின் வதிவிட வீசா ( குவைத் அரசினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை (CIVIL ID) சமர்ப்பித்தல் வேண்டும்.)
6. கடவுச்சீட்டில் இலங்கை தேசிய அடையாள அட்டையின் இலக்கம் குறிப்பிடப்படாமல் இருந்தால் இலங்கை தேசிய அடையாள அட்டையின் மூலப்பிரதியை சமர்ப்பித்தல் வேண்டும்.
7. கடவுசீட்டு அளவிலான (35mm x 45mm) கருப்பு வெள்ளை புகைப்படங்கள் 02.
8. புதுப்பித்தல் கட்டணம் – 35 தீனார்கள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ள விண்ணப்பங்கள் மாத்திரம் தூதரகத்தின் வாயிலாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் தூதரகத்திற்கு கிடைக்கப்பெற்றதும் விண்ணப்பதாரிகளை தொடர்பு கொண்டு கையளிக்கப்படும் என்பதனை அறியத் தருகிறோம்.