நாடு திரும்பும் இலங்கையர்களின் கட்டண விபரங்கள்

நாடு திரும்பும் இலங்கையர்களின் கட்டண விபரங்கள்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களிடம் அறவிடப்படவேண்டிய விமான பயண டிக்கட் கட்டணம், பி.சி.ஆர் கட்டணம், ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கான கட்டணம் என்பன தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (12) காலை வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் முன்னதாக பல முறைகேடுகள் இடம்பெறறதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.

மூன்றாம் தரப்பினர் தலையிட்டு அதிக பணத்தை அறவிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்லாமல் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விமான டிக்கட்டுகளுக்கும், ஹோட்டல்களுக்கும், பி.சி.ஆர் பரிசோதனைக்கும் பெருமளவு பணம் அறவிடப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே ஜனாதிபதி தெளிவான ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றார்

இதற்கமைய வைத்தியசாலைகளில் பி.சிஆர் பரிசோதனைக்காக 6,500 ரூபாய் மாத்திரமே அறவிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது அவ்வாறாகவே முன்னெடுக்கப்படுகின்றது.

இதேநேரத்தில் ஒரு நபரிடமிருந்து 7,500 ரூபாவுக்கு மேலதிகமாக அறவிட வேண்டாமென ஹோட்டல்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு நபர்கள் இருப்பார்களாயின் 12,000 ரூபாவுக்கு அதிகமாக அறவிடக் விடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையும் அந்த முறையிலேயே கட்டுப்படுத்தப்பட்டது.

இதேவேளை, விமான பயண டிக்கட்டுக்காக ஒவ்வொரு நேரத்திற்கு ஒவ்வொரு கட்டணத்தை அறவிடாமல் நியாயமான - பொதுவான கட்டணத்தை அறவிடுமாறு விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒரேநேரம் ஒரு டிக்கட்டுக்கு 70,000 ரூபாவும், அடுத்த நாள் 150,000 ரூபாவும் அறவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நியாயமான - பொதுவான கட்டணத்தை அறவிடுமாறு விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image