ஊடகங்களுக்கு கருத்து வௌியிடல்: அரச அதிகாரிகளுக்கான விசேட அறிவித்தல்
ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் பிரதானிகளின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடவோ அல்லது வழங்கவோ முடியாது என சுகாதார சேவையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தின் பிரதானியினின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கும் அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் \எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவினால் கையொப்பமிடப்பட்டு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் ஊடாக அறிக்கைகளை வெளியிடுவது தொடர்பில் தற்போதுள்ள அரச நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைய சுகாதார அமைச்சின் செயலாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
மாகாண சுகாதார செயலாளர்கள், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் பிரதானிகள், அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் இது பொருந்தும்
உயர் நீதிமன்ற வழக்கு எண். SC/FR/371/2022 இன் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பும் இங்கு கவனத்திற்கொள்ளப்பட்டு, திணைக்கள பிரதானியின் அனுமதியின்றி ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடவோ அல்லது ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவோ அரச அதிகாரிகளுக்கு சட்டப்பூர்வமான இயலுமை இல்லை என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நிறுவன ரீதியாக குறித்த சுற்றறிக்கை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இடைநிலை மருத்துவ ஊழியர்களின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு தங்கள் தரப்பினர் தொடர்பான கருத்துகளை வௌியிடும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து வௌியிடும் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமென பல சந்தர்ப்பங்களில் நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அவை தொடர்பில் கவனம் செலுத்தாது இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மூலம் - நியூஸ்பெஸ்ட்