ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - கல்வி அமைச்சர்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - கல்வி அமைச்சர்

மலையக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மலையக. பெருந்தோட்ட மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து இருநூறு வருடங்கள் நிறைவடைகின்றன. அதனையொட்டி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட  அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்.

அதன் ஒரு அம்சமாக நுவரெலியா மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நான் கடந்த வாரம் கொட்டகலை பகுதிக்கு சென்று அது தொடர்பில் நேரில் நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அங்கு ஆசிரியர் கலாசாலை மற்றும் ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரிக்கும் சென்று நிலைமைகளை ஆராய்ந்தேன்.

அதேவேளை, இதற்கு முன்னர் 2005 மற்றும் 2010ற்கு  இடைப்பட்ட ஆண்டுகளில் தோட்டப் பாடசாலைகளுக்கு பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தப் பாடசாலைகள் ஆரம்பத்தில் அங்கிருந்த தோட்ட நிறுவனங்களின் கீழேயே இயங்கி வந்தன. பின்னர் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தையடுத்து 1998 இல் இந்த அனைத்து பாடசாலைகளும் மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

அன்றிலிருந்து இன்று வரை 90வீதமான தோட்டப் பாடசாலைகள், தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் மாகாண சபை நிர்வாகத்தின் கீழேயே பராமரிக்கப்பட்டன. இவ்வாறு தான் தோட்டப் பாடசாலைகள் காலத்துக்குக் காலம் முன்னேற்றமடைந்தன.

அந்த வகையில் நான் 2005 ஆம் ஆண்டு கல்வியமைச்சராகப் பதவி வகித்த போது 3200 ஆசிரியர்களை அந்தப் பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

பல்வேறு சிக்கல்கள், சவால்களை எதிர்கொள்ள நேர்ந்த போதும் இறுதியாக நாம் அந்தப் பகுதியில் உள்ள ஆசிரியர்களையே அந்த பாடசாலைகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்தோம். அவ்வாறுதான் அன்று தோட்டப்பகுதி பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தீர்வு கண்டோம். 

அதே வேளை அமைச்சர் பந்துல குணவர்தன  சில மகிந்தோதய தொழில்நுட்ப விஞ்ஞானக் கூடங்களையும் அங்கு நிறுவினார்.

தற்போது நான்  தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை கணிப்பீடு செய்து அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உள்ளிட்ட பல பாடங்களுக்காக இந்த ஆசிரிய வெற்றிடங்கள் நிலவுகின்றன. தோட்டப்பகுதிகளில் இருந்து பட்டதாரிகள் உருவாவது மிகக் குறைவாக காணப்படுவதால் அதற்கு மாற்று வழியை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆசிரியர் கலாசாலைகளுக்கு அவ்வாறு நியமனம் வழங்கும்போதும் நாம் தோட்டப்பகுதிகளுக்கு விசேட மட்டமொன்றை நடைமுறைப்படுத்தினோம்.

எவ்வாறெனினும் தற்போது மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அங்கு நிலவும் வெற்றிடங்கள் தொடர்பில் கணிப்பீடுகளை மேற்கொண்டு அறிவிக்குமாறு நான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். அதற்கான விஷேட வேலைத் திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தவுள்ளேன். பாராளுமன்ற கல்வி ஆலோசனைக் குழுவுக்கும் அது தொடர்பில் அறிவிப்பேன்.

இரண்டு மாதங்களுக்குள் அது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இந்த வருட இறுதிக்குள் அவற்றை நிறைவு செய்து அடுத்த வருடம் வரவு செலவுத் திட்டத்தில் விசேட வேலைத் திட்டம் ஒன்றின் மூலம் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்விப்பொதுத் தராதர உயர்தரம் சித்தி பெற்றவர்களிலிருந்து அதற்காக தெரிவு செய்ய தீர்மானித்துள்ளோம் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image