அடக்குமுறையைத் தோற்கடிக்க பரந்த கூட்டணியாக முன்னோக்கி செல்வோம்

அடக்குமுறையைத் தோற்கடிக்க பரந்த கூட்டணியாக முன்னோக்கி செல்வோம்

அடக்குமுறையத் தோற்கடிக்க தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பரந்த கூட்டணியை உருவாக்கி முன்னோக்கி செல்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



இன்று (26) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க - ராஜபக்ஷ அரசாங்கம் தற்போதைய சந்தர்ப்பத்திலும் பாரிய அடக்குமுறையை முன்னெடுக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆக்கப்பட்டுள்ளார். மொட்டு கட்சிக்கு எதிராகவும், ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிராகவும், கோட்டாபய ராஜபக்சவை நாட்டிலிருந்து வெளியேற்றிய சக்திகளை அடக்குவதற்கான தயார்படுத்தல் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை துரத்தித் தாக்கினர். அதன்பின்னர் அவசரகால சட்டத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். இன்றைய தினம் காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருடன் பொலிஸார் முரண்பட்டுள்ளனர். பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு 50 மீற்றர் பகுதிக்குள் பிரவேசிக்கக் கூடாது என சில தரப்பினருக்கு எதிராகவே நீதிமன்ற தடை உள்ளது. ஆனால் அந்த நீதிமன்ற உத்தரவை திரிபுபடுத்தி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு நீதிமன்ற உத்தரவை திரிபுபடுத்தி நடைமுறைப்படுத்த முயற்சிக்கும்போது அங்கே இருந்த தரப்பினர் கேள்வி எழுப்பினர். இதன்போது அங்கு தெளிவுபடுத்துவதற்கு பதிலாக பொலிஸாரால முரண்பாட்டு நிலை ஏற்பட்டது.

108 நாட்களாக இந்த போராட்டம் தொடர்கின்றது. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. தற்போதுதான் சட்டம் நினைவுக்கு வந்திருக்கின்றது. இப்போது ஒழுக்கத்தை கற்பிக்க பார்க்கின்றனர். ஒழுக்கத்தை கற்பிக்க வந்த கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என்ன நடந்தது என்பதை ரணில் விக்கிரமசிங்க பார்த்துக்கொள்ளவேண்டும். நாட்டில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஒழுக்கத்தை சீராக்கல் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடமளித்தல் என்று கூறிக்கொண்டு, முழுமையாக ஜனநாயக விரோத ஆட்சிக்கு தற்போது அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையிலும், உலகிலும் ஜனநாயக விரோத ஆட்சியாளர்கள் வரலாற்றில் குப்பை கூளத்திற்கே செல்லும் நிலை ஏற்பட்டது.

ரணில் கொழும்பு மாவட்டத்தில் வாக்கு கேட்டு மக்களினால் முழுமையாக நிராகரிக்கப்பட்டு பின்னர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வந்து ராஜபக்ஷக்களின் 134 வாக்குகளால் ஜனாதிபதியானார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது. எரிபொருளுக்கு காத்திருக்கும் வரிசைக்கு தீர்வு வழங்க முடியாது. பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் இன்னும் உரிய முறையில் போக்குவரத்தை வழங்க முடியவில்லை. இலங்கை பாரிய உணவு நெருக்கடிக்குள் உள்ளதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்திருக்கின்றது.


இவ்வாறான சூழ்நிலையில் இந்த அரசாங்கத்திற்கு நிலைத்தன்மை இல்லை. அடக்குமுறை மூலமே அவர்களின் நிலைத்தன்மை உறுதியாகும். ஆகவே அவர்கள் இராணுவத்தினர் மூலமாகவும், பொலிஸார், விசேட அதிரடிப்படை மூலமாகவும் அடக்குமுறையை முன்னெடுக்கின்றனர். இந்த அடக்கு முறைக்கு எதிராக எடுக்கக்கூடிய உச்சபட்ச நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டிணைவு என்ற அடிப்படையில் தற்போது நாங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றோம்.

தொழிற்சங்கங்கள் வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பரந்த கூட்டணியை இந்த அடக்குமுறைக்கு எதிராக உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்தக் கூட்டணியை உருவாக்கி அடக்குமுறையைத் தோற்கடிக்க நாங்கள் நிச்சயமாக முன்னோக்கி செல்வோம். - என்றார் 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image