ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்கள் குரலுக்கு செவிசாய்த்து உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த ஹரத்தால் போராட்டத்திற்கு, ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள், தொடருந்து, பேருந்து, சுகாதாரம், வங்கி, மின்சாரம், அஞ்சல், துறைமுகம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்துறைசார் தொழிற்சங்கங்கள் இன்று நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஹர்த்தால் போராட்டத்திற்கு சகல தொழிற்சங்கங்களும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன.
நிர்வாக சேவை ஊழியர்களும் ஹர்த்தாலுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமையால் அரச சேவை திணைக்களங்களில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவதுறைசார் தொழிற்சங்கங்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள போதிலும் , நோயாளர்களின் நன்மை கருதி சேவையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தபால் சேவை
அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு பிரதிபலிப்பாக உறுப்பினர்கள் சிலர் அங்குமிங்கும் மாற்றப்பட்டுள்ளனர். நாம் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல. எனவே அரசாங்கத்தை மீண்டும் பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்' என்று அகில இலங்கை தபால் சேவை தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
அரச தாதிகள் சங்கம்
இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்களும் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு மருத்துவதுறை சார் தொழிற்சங்கங்கள் முழுமையான ஆதரவை வழங்கும். எனினும் நோயாளர்களின் நலன் கருதி பணிக்கு சமூகமளித்தமையை உறுதிப்படுத்தும் நாளாந்த வரவு சீட்டில் கையெழுத்திடாமல் நோயாளர்களுக்கான சேவை வழங்கப்படும்' என்று அரச தாதிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க முன்னணி
ஹர்த்தால் போராட்டத்திற்கு அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவளிப்பர். அதற்கமைய அதிபர் , ஆசிரியர்களை பாடசாலைகளுக்குச் செல்லாமல் போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும், ரயில்வே திணைக்களத்தின் ரயில் கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் உள்ளிட்ட பிரதான தொழிற்சங்கங்கள், இந்த நிர்வாக முடக்கலுக்கு ஆதரவளிக்கவில்லை என ரயில்வே போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவை வெளியிட்டு, நேற்று நள்ளிரவு முதல் சகல சேவைகளிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் வழமைப்போல சேவையில் ஈடுபடும் என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேநேரம், நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக, நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக, இன்று மதியம் 12 மணிமுதல் ஒரு மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.