ஹர்த்தால் தொடர்பில் பேலியகொடை மெனிங் சந்தையில் விழிப்புணர்வு!
தொழிற்சங்கங்கள் மற்றும் பகுஜன் அமைப்புக்கள் ஒன்றிணைந்து 6ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஹர்த்தால் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் நேற்று (04) மெனிங் சந்தை கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
கையேடுகளை பகிர்ந்தளித்து வர்த்தக சமூகத்தினரை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் பேலியகொடை மெனிங் சந்தையின் உபதலைவர் பிரபாத் சுசந்த பங்கேற்றிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர் ஆறாம் திகதி அனைத்து கடைகளின் உரிமையாளர்களும் மரக்கறிகளை கொண்டுவரும் நடவடிக்கையை கைவிட்டு ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் தங்களால் இயன்ற அனைத்து நகரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வர்த்தகர்கள் எதிர்நோக்கும் எரிபொருள் பிரச்சினை, நுகர்வோர் வருகை தராமையால் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, நாளாந்தம் அதிகரிக்கின்ற உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பால் தாங்கள் பாரிய துன்பங்களை எதிர்நோக்குவதாகவும், இந்த துன்பங்களில் இருந்து மீள்வதற்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டும் என குறிப்பிட்டனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிலாளர் போராட்டம் மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள்இதன்போது பங்கேற்றிருந்தனர்.