அரசுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் நுவரெலியா நகரில் நேற்று (28) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நுவரெலியா காமினி வித்தியாலயத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி நுவரெலியா நகரை அடைந்ததும் அங்கு எதிர்ப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிபர் ஆசிரிய சங்கங்களின் ஒருக்கிணைப்பாளர்கள் உறையாற்றினர். கட்சி, இனம், மதம் பேதம் இன்றி ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட அதிபர் ஆசிரியர்கள் இந்த அரசின் முறையற்ற பொருளாதார கொள்கை காரணமாக மாணவர்களின் கல்வி பெரும் கேள்வி குறியாகியுள்ளது என்று தெரிவித்தனர்.
மேலும் மாணவர்களின் பேருந்து பயண கட்டணம் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களால் தினமும் பாடசாலைக்கு வருகை தர முடியாத நிலை காணப்படுகின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு மூன்றுவேலை உணவை பெற்றுக் கொடுக்க முடியாது பெற்றோர்கள் திண்டாடுகின்றனர். மாணவர்களினால் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் முறையாக கல்வியை தொடர முடியாது உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், ஆசிரியர்களும் பிரயாண சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள காலை முதல் வரிசையில் நிற்க வேண்டியுள்ள நிலையில் அவர்களால் மாணர்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக் கொடுக்க முடியாது மன விரக்திக்கு உட்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். எனவே இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த அரசாங்கம் உடனே பதவி விலக வேண்டும் எனவும், ஜனாதிபதி வேண்டாம் எனவும், இதனை சரி செய்ய முடியாத இந்த அரசு உடனே பதவி துறக்க வேண்டும் என பதாகைகள் ஏந்தி கோசம் எழுப்பியவாரு பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.